இரண்டு சந்தேகங்கள்…

ஜூன் 1, 2014

இன்று என் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காலையில் முதலில் கோவிலுக்கு சென்றோம். ரொம்ப மாதமாக போக வேண்டும் என்று நினைத்த , கோடம்பாக்கம் சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றோம்.  வடபழனியில் இருந் செல்லும் பொழுது கோடம்பாக்கம் பாலம் ஏறுவதற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் , பிரம்மாண்டமான கோபுரத்துடன் எழுந்தருளி இருக்கிறாள் அம்பாள்.

 

கால் முட்டி வலி உடையவர்கள் ஏற அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த படிக்கெட்டுகளில் ஏறி  உள்நுழைந்தால் , பிரம்மாண்டமான தியான மண்டபம். வரிசையாக ஸ்ருங்கேரி மடாதிபதிகளின் படங்கள் இருந்தன. அங்கு வேறு யாரையும் காணவில்லை. இடப்புறம் இருக்கும் படிக்கெட்டுகளில் ஏறி அடுத்த தளத்திற்கு சென்றால், உள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வேழமுகத்தோன்.  விநாயகர் சந்நிதிக்கு இடப்புறம், ஹாலின் நடுநாயகமாய் அம்பாள் வீற்றிருக்கிறாள். காண்போர் மனதை கொள்ளைக் கொள்ளும் விதமாய் இருந்த சாரதாம்பாளை வணங்கி விட்டு அடுத்து நகர்ந்தால் இறுதியாய் ஏழுமலையான் மலையில் இருந்து இறங்கினாலும் இங்கே உயரத்தில்தான் நிற்பேன் என்று நின்றுக் கொண்டிருக்கிறான். அளவாய் மூன்றே சந்நிதிகள். காலை பதினோரு மணிக்கு முன்பு செல்லுங்கள். பதினோரு மணிக்கு நடை சாத்திவிடுகிறார்கள்.

இப்ப தலைப்புக்கு வரேன்….

சுப்பிரமணிய சுவாமியினால் புகழ்பெற்ற அந்த கடையின் தி நகர் கிளையில் சாப்பிட சென்றோம். உணவின் ருசி , விலை பற்றி பிரச்சனை இல்லை. அந்தக் கடையினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சிறு மேடை இருக்கும். அதில் இனிப்பு/சிப்ஸ் போன்றவை இருக்கும். அதற்கு இடதுபுறம் பில் போடும் மேஜை. இரண்டிற்கும் இடையில் சிறு இடைவெளி உள்ளது. அதில் ஒரு பெண்  ஒரு காலை தொங்கவிட்டு ஒரு காலை மடித்து  கொஞ்சம் திரும்பிய வாக்கில் உக்காந்திருந்தாள். நாள் முழுக்க அப்படிதான் உக்காரணும்… நேராய் உட்கார்ந்தால் காலை மடிக்க இயலாது தொங்க விட இயலாது . வேலை செய்பவர்கள் கொஞ்சம் வசதியாய் உட்கார வசதி செய்துக் கொடுத்தால் லாபம் குறைந்து விடுமோ ??

 

அடுத்த சந்தேகம், இந்த நகைக் கடையில் வேலை செய்யும் பெண்கள் எப்படி ஒரே வார்ப்பில் வடித்தவர்கள் போல் உள்ளனர். தேர்வு செய்யும் பொழுதே, ஒல்லியாக எலும்பும் தோலுமாய் இருப்பவர்களைத்தான் தேர்வு செய்வார்களோ ?? இல்லை தேர்வு செய்தபின் டயட் இருக்க சொல்லி மாற்றி விடுவார்களா ?

 

எதோ ஒரு கதை (குமுதம் / ஆவி ??)  வாத்யார்  எழுதியது . சேட்டுகள் தங்கள் கடைகளில் வேலை செய்யும் பெண்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாய் இருப்பார்கள். அதிக கவனம் ஈர்க்காத கொஞ்சம் ஒல்லியாய் மாநிறமாய் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்ற ரீதியில் வரும். எந்தக் கதை என மறந்து விட்டது .

 

இங்கும் அது போல் இருக்குமோ ??

 

அன்புடன் எல்கே

Advertisements

ஒன்றாய் …

மே 4, 2014

images

நாம் இணைந்து கண்டக்

கனவுகள் பல – இருப்பதென்னவோ

தனித்தனியாய் – கனவு மட்டும்

ஒன்றாய்….

 

விநோதங்கள் பல

இவ்வுலகில் – அதில் நம்

கனவும் ஒன்றாய்…

 

சில நேரங்களில் தூர

தேசங்களில் ஒன்றாய் – சிலவற்றில்

உன் வீட்டில் இருவருமாய் – அர்த்தமற்றதாய்

பல – கனவு மட்டும்

ஒன்றாய்….

 

 

அன்புடன் எல்கே

நகரேஷு காஞ்சி

மே 1, 2014

நகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது.  காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…

அருள்  பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .

அன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில் Kamatchiamman_T1

கைலாயநாதர் கோவில்

சென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ).  ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 

தஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.

IMG_20140501_081318 IMG_20140501_082855

இதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.

மஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..

அன்புடன் எல்கே

நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்……

ஏப்ரல் 20, 2014

சென்ற வாரம் திருவேற்காடு சென்று வந்தப் பிறகே, வாரம் ஒரு கோவில் என முறை வைத்து சென்னையை சுற்றியுள்ள ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என நானும் என் திருமதியும் முடிவு செய்திருக்கிறோம். அதன் படி இந்த வாரம் சென்ற இடம் திருநீர்மலை.

வழி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை சென்றதில்லை. பம்மல் வரை தடுமாற்றமில்லாமல் சென்றுவிட்டோம். பிறகு திரும்பாமல் நேரே செல்ல வேண்டிய இடத்தில் திரும்பியதில் ஒரு கிலோ மீட்டர் அதிகப் பயணம். கிளம்பியதே ரொம்பத் தாமதமாகத்தான். இதில் இந்த மாதிரி தாமதங்களும் சேர்ந்துக் கொள்ள, சூரியன் நன்கு சுட்டெரிக்கத் துவங்கிய நேரத்தில் ஸ்தலபதியாகிய நீர் வண்ணப் பெருமாள் கோவிலை அடைந்தோம்.

கூட்டமே இல்லாதப் பெருமாள் கோவிலை இப்பொழுதுதான் பார்க்கிறேன். பெருமாள் சந்நிதியில் நாங்கள் மூவர் மட்டுமே. நின்று நிதானமாக ஏகாந்தமான தரிசனம். திருப்பதிப் பெருமாளை விட மூலவர் சிறிது சிறியவர்தான், உருவில்.  பிரம்மோத்சவம் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மூலவரை தரிசித்து வெளியே வரும் தருணத்தில் , உற்சவர் திருவீதி உலா சென்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரையும் தரிசித்து என் அலைபேசியில் அவரை சிறைப் படுத்திக் கொண்டு தாயார் சந்நிதிக்கு சென்றோம் .

 

நீர் வண்ணப் பெருமாள்

நீர் வண்ணப் பெருமாள்

தாயார் சந்நிதியில் தீபாராதனைக் காட்ட பட்டர் யாரும் இல்லை. சந்நிதியும் சார்த்தப் பட்டிருந்தது. வெளியில் இருந்து தாயாரை சேவித்து விட்டு கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவில் வெளியே இருந்த பந்தல் நிழலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொண்டு சென்ற நீர்மோரினால் தாக சாந்திப் பண்ணிக் கொண்டு, மலை மேல் ஏறத் துவங்கினோம். சூரியனின் கைவண்ணத்தில் , எங்கள் கால்கள் பொரிந்தன. விடு விடுவென  ஓட வேண்டியதாகப் போனது .

10247428_669367509795595_610080798967983542_n

மேலே இருக்கும் கோவிலிலும் ஏகாந்தமாய் தனிமையில் பள்ளிக் கொண்டிருந்தார் ரங்கநாதர். காலடியில் பூதேவியும் ஸ்ரீ தேவியும் அமர்ந்திருக்க அற்புதமான தரிசனம் அது.  ரங்கநாதரை தரிசனம் செய்து , உள்பிரகாரத்தை வலம் வந்தால், மூன்றடியால் உலகளந்த வாமனரையும் , சாந்த சுவரூபமாக அமர்ந்திருக்கும் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்யலாம். வெளியே இருந்த வெய்யிலின் உக்கிரத்தினால் வெளிப் பிரகாரத்தை வலம் வரவில்லை.

சிலக் கவலைகள்

 

பம்மல் தாண்டியப் பிறகு, வழி நெடுகும் , இருபது அடிக்கொன்று என்றக் கணக்கில் ஜப வீடுகளும், சர்ச்களும் முளைத்துள்ளன. பிருங்கி மலை பரங்கி மலை ஆகி தாமஸ் மவுன்ட் ஆனது போலும், மயிலைக் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது போலும் வரும் காலத்தில் திருநீர்மலைக் கோவில் பெருமாள் அல்ல அது இயேசு என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை,

நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்

தலைப்பிற்கான விளக்கம் , கீழே நின்றக் கோலத்திலும், மேலே பள்ளி கொண்டவனாய் கிடந்தக் கோலத்திலும், வாமனனாய் நடந்தக் கோலத்திலும் , நரசிம்மமாய் இருந்தக் கோலத்திலும் காட்சி அளிப்பதை இப்படி சொல்கிறார்கள். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று என அங்கிருந்த பட்டர் சொன்னார்.

சென்னைவாசிகள் நேரம் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்.

அன்புடன் எல்கே

திருவேற்காடு – கருமாரியம்மன்

ஏப்ரல் 14, 2014

நேற்று உறவினர் ஒருவரை சந்திக்க, அம்பத்தூர் வரை செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த கிளம்பி அம்பத்தூர் எஸ்டேட் தாண்டும் வரை வேறு எங்கும் செல்லும் என்னமோ திட்டமோ இல்லை. எஸ்டேட் தாண்டி ஓ டி செல்லும் வழியில் திருவேற்காடு செல்லும் சாலை வரும். அங்கு ஒரு தகவல் பலகை வைத்திருந்தார்கள். எதேச்சையாக அதைப் பார்த்தவுடன் மனம் விரைவாக திட்டமிட ஆரம்பித்தது. உறவினர் வீட்டிற்கு சென்றவுடன், முதல் வேலையாக மொபைலில் நோண்டி வழியும் தொலைவும் பார்த்துக் கொண்டேன்.

நன்றி : இணையம்

பின், கதிரவன் கீழிறங்கத் துவங்கிய வேளையில் அங்கிருந்து கிளம்பி , ஒரு அரை மணி நேரத்தில் திருவேற்காடு சேர்ந்தோம். குளக்கரையில் வண்டியை பார்க் செய்து விட்டு , வந்தால் முதல் சோதனை. குளத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு, கோவில் பிரதான வாயில் எதிரே சேற்றுத் தண்ணீர். எதோ பைப் உடைந்துள்ளது. அதை சரி பண்ண யாருக்கும் நேரமில்லை போல. காலைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு சகதி.  பின் அங்கிருந்தவர்கள் , பக்கவாட்டில் இருந்து மற்றொரு வழியைக் காட்ட, அதன் வழியாக உள்ளே நுழைந்தோம்.

நன்றி ; இணையம்

நன்றி ; இணையம்

கோவில் உள்பிரகாரத்தினுள் நுழைந்தவுடன் முதலில் காட்சி அளித்தவர், ஷண்முகன். உத்திரத்தன்று உள்ளே நுழைந்தவுடன் முருகன் தரிசனம். வேறென்ன வேண்டும்…முருகனை மனமாரக் கும்பிட்டு மேற்கொண்டு நடந்தால், மரச்சிலை அம்மன் சன்னிதி. இது அம்மனின் உற்சவரா , இதன் பின் உள்ள கதை என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அம்பாளின் கண்கள்  இதை வர்ணிக்க அந்த காளிதாசன்தான் வரவேண்டும். என்ன ஒரு வாத்சல்யம் அந்தக் கண்களில்.. கருணைப் பொங்கும் கண்கள் என்பார்களே அதற்கு அந்தக் கண்கள்தான் உதாரணம். இந்த நொடி வரை அவ்விருக் கண்களும் என் நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை நேரம் நின்றாலும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அந்த முகம். பின் மெதுவாய், வரிசையில் நின்று அம்பாளைத் தரிசனம் செய்தோம். மிக அற்புதமான தரிசனம். எந்த வித விரட்டல்களும் இல்லாமல் , நின்று நிதானமாய் தரிசித்தோம்.

கிளம்பும் தருவாயில் பார்த்தது, கோவிலின் ஒரு மூலையில் புதிதாய் கட்டியது போல் இருந்த பெருமாள் சன்னிதி . சகலாபரண பூஷிதராக  நின்றுக் கொண்டிருந்த பெருமாளையும் , அங்கிருந்த சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமரையும் தரிசித்து, பின் இருட்டும் தருவாயில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

திருவேற்காடு போகும் எந்த விட திட்டம் இல்லாமல் இருந்தவர்களை அழைத்து , அற்புதமான தரிசனம் செய்வித்தது அந்த அம்பாளேதான்…

அடுத்த வாரம் திருநீர் மலை அல்லது சிறுவாபுரி முருகன் கோவில் செல்ல எண்ணம் வைத்துள்ளேன். இறைவன் அருள் எப்படி உள்ளதோ….

அன்புடன் எல்கே

இரவு

மார்ச் 15, 2014

மெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன்.  நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது.

இரவு 10 : 00

எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.

இரவு 10:20

கையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.

இரவு  11:00

பள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.

இரவு 11:30  

எக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
வெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.

மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன்.  அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.

மெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்….

அன்புடன் எல்கே

அமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …

பிப்ரவரி 22, 2014

திவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

திறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சி துவங்கியவுடனேயே ஒரு ஆச்சர்யமளித்த சம்பவம் . பொதுவாய் பள்ளி நிகழ்வுகளில் டீச்சர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினான். வரவேற்புரை யு.கே.ஜி படிக்கும் ஒரு சிறுமி. சிறுவர்களின் குரலில் தொகுத்து வழங்கியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக , சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை வந்திருந்தார். சுருக்கமாக பேசினாலும் அவர் பேசியது இன்றையத் தலைமுறை பெற்றோர்களுக்கு அவசியம் என்றேத் தோன்றியது. அவர் சொன்னதின் சுருக்கம் ,

“இன்றையக் குழந்தைகளுக்கு அறிவியல் முன்னேற்றத்தினால், அனைத்தும் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அன்பும் அரவணைப்பும். ஆதலால், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதே போல் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள் என்றார்.”

இதன்பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நிகழ்ச்சியாய் விநாயகரின் மேல் பாடல் ஒன்று. குழந்திகள் விநாயகர் போல் வேடமிட்டிருக்க, நாடிய நிகழ்வாய் அமைந்தது அது. தொடர்ந்து ரைம்ஸ், குஜராத்தி ,மராத்திப் பாடலுக்கு நடனம் என்று கலக்கினர் குழந்தைகள். அதுவும் குஜராத்தி பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளனர்.

அதன் பின் எல்கேஜி,யு கே ஜி குழந்தைகளின் பஜன். இதில்தான் திவ்யாவும் பாடினாள். ஆறு அருமையான சிறிய பாடல்கள். நேற்று எதுவும் ரெக்கார்ட் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமே சி டி தருவதாக சொல்லி இருந்தனர். அவள் தனியாக பாடியது அலைபேசியில் உள்ளது. அதை நாளை வலையேற்றம் செய்கிறேன்.

மேலும் நாம் எழுந்து ரெக்கார்ட் செய்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையும் . எனவே அமைதியாக உட்கார்ந்து பார்ப்பதை மட்டுமே செய்தேன். அதன் பின் சிறு சிறு கதைகளை நாடகமாக நடித்தனர்.  மழலை மாறா குரலில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆனந்தமாய் இருந்தது.

இறுதியில் நன்றியும் , வரவேற்புரை நிகழ்த்திய அதே சிறிய வாண்டு செய்ய நிகழ்வு இனிதாய் முடிந்தது. இதுவரைக்கும் வாண்டுகளைப் பற்றி. ஆனால் நேற்று நிகழ்வில் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தவர்கள் அந்த வாண்டுகளின் பெற்றோரே.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகளே ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும் எல்லா நிகழ்வுகளையும் முடிந்த பின் குழந்தைகளை அழைத்துக் கொள்ள சொன்னார். ஆனால் இரண்டையுமே பெற்றோர்கள் கேட்கவில்லை. ஒப்பனை அறைக்கு செல்வதும் பின் அரங்கிற்கு வருவதுமாய் ஒழுங்கீனத்தின் மொத்த உருவாய் இருந்தனர். 

அதே போல் போட்டோ எடுக்க வேண்டாம் . தனியாக சி டி மற்றும் போட்டோ தருகிறோம் என்று சொல்லி இருந்தனர். கேட்டனரா பெற்றோர்கள். தங்களிடம் இருந்த அனைத்து கருவிகள் மூலமும் போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போல், அவரவர் வீட்டுக் குழந்தைகள் மேடையில் வந்தால் மட்டுமே கை தட்டுவோம் என்று முடிவெடுத்தவர்களாய் ஜடம் போல் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் எந்தவித போட்டி உணர்வும் இல்லாமல் அழகாய் நிகழ்ச்சிகள் பண்ண , இவர்களே அவர்கள் மனதில் நச்சை ஊட்டிவிடுவார்கள் போல இருந்தது.

அதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.

திருந்துங்கள் பெற்றோர்களே !!!!

-அன்புடன் எல்கே

தேன் – திவ்யா சொன்னக் கதை

பிப்ரவரி 18, 2014

ஒரு பட்டாம்பூச்சி பறந்துட்டு இருந்தது. அப்ப ஒரு காக்கா வந்துச்சாம். காக்கா , பட்டாம்பூச்சிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டுச்சாம். அதுக்கு பட்டாம்பூச்சி “எனக்கு தேன் வேணும்னு கேட்டுச்சாம் “

. உடனே காக்கா என் கிட்ட தேன் இல்லை. நீ இன்னும் கொஞ்சம் தூரம் போனா நாய் இருக்கும். அதுகிட்ட கேளுன்னு சொல்லிட்டு பறந்து போச்சாம்.

அதே மாதிரி நாய்கிட்ட போய் கேட்டுச்சாம். அதுக்கு நாய் , என்கிட்ட தேன்லாம் இல்லை. மேகத்துகிட்ட கேளுன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்.

அதே மாதிரி பட்டாம்பூச்சி மேகத்துகிட்ட கேட்டதாம். உடனே மேகம் மழைய தந்து, இப்ப பூ பூக்கும் அதுக்கிட்ட கேளுன்னு சொன்னதாம்.

அதே மாதிரி மழை வந்து பூ பூத்ததாம். அப்புறம் பட்டாம்பூச்சி பூ கிட்ட தேன் குடிச்சிட்டு பறந்து போயிடுச்சாம்

எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்

பிப்ரவரி 17, 2014

“உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்?”
.
மகா பெரியவாளின் கேள்வி.

[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)

ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.

“உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்?”.

திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.

பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி “இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்” என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி “சரி! சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்” என்றார்.

ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.

“சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி” இது ஒருவர் விளக்கம்.

“மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்” இது ஒருவர்.

இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.

“நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி?

அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே!” என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெரியவர் பேசலானார்.

“இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட “தான்” போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த “தான்” என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்” என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

“தான்” என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று “நான்” என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.

பெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.

காதல் பயணம்

பிப்ரவரி 14, 2014

images
தென்றல் மெதுவாய் வருடிச்
சென்றுக் கொண்டிருக்க – நீரலைகள்
படகில் மோத – மோன நிலையில்
இருந்தேன் நான்….

என்னெதிரே அவள் அமர்ந்திருக்க
மாசற்ற அவள் முகத்தில் – கண்கள்
எனை நோக்கிப் பார்த்திருக்க – அவை
பேசியக் கதைகள் பல…

என் விரல்கள் அவள் கைகளை
அளக்க – அவள் முகம் அந்தி நேர
சூரியானாய் சிவந்தது….

எனை நோக்கியக் கண்கள்
மெல்லத் தாழ – என் அதரங்களோ
வேறு கதை சொல்லத் துடித்தன ….

நீரலைகள் படகை
உந்திச் செல்ல – காதல்
பயணம் தொடர்ந்தது…..

– அன்புடன் எல்கே