அமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …


திவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

திறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சி துவங்கியவுடனேயே ஒரு ஆச்சர்யமளித்த சம்பவம் . பொதுவாய் பள்ளி நிகழ்வுகளில் டீச்சர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினான். வரவேற்புரை யு.கே.ஜி படிக்கும் ஒரு சிறுமி. சிறுவர்களின் குரலில் தொகுத்து வழங்கியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக , சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை வந்திருந்தார். சுருக்கமாக பேசினாலும் அவர் பேசியது இன்றையத் தலைமுறை பெற்றோர்களுக்கு அவசியம் என்றேத் தோன்றியது. அவர் சொன்னதின் சுருக்கம் ,

“இன்றையக் குழந்தைகளுக்கு அறிவியல் முன்னேற்றத்தினால், அனைத்தும் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அன்பும் அரவணைப்பும். ஆதலால், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதே போல் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள் என்றார்.”

இதன்பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நிகழ்ச்சியாய் விநாயகரின் மேல் பாடல் ஒன்று. குழந்திகள் விநாயகர் போல் வேடமிட்டிருக்க, நாடிய நிகழ்வாய் அமைந்தது அது. தொடர்ந்து ரைம்ஸ், குஜராத்தி ,மராத்திப் பாடலுக்கு நடனம் என்று கலக்கினர் குழந்தைகள். அதுவும் குஜராத்தி பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளனர்.

அதன் பின் எல்கேஜி,யு கே ஜி குழந்தைகளின் பஜன். இதில்தான் திவ்யாவும் பாடினாள். ஆறு அருமையான சிறிய பாடல்கள். நேற்று எதுவும் ரெக்கார்ட் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமே சி டி தருவதாக சொல்லி இருந்தனர். அவள் தனியாக பாடியது அலைபேசியில் உள்ளது. அதை நாளை வலையேற்றம் செய்கிறேன்.

மேலும் நாம் எழுந்து ரெக்கார்ட் செய்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையும் . எனவே அமைதியாக உட்கார்ந்து பார்ப்பதை மட்டுமே செய்தேன். அதன் பின் சிறு சிறு கதைகளை நாடகமாக நடித்தனர்.  மழலை மாறா குரலில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆனந்தமாய் இருந்தது.

இறுதியில் நன்றியும் , வரவேற்புரை நிகழ்த்திய அதே சிறிய வாண்டு செய்ய நிகழ்வு இனிதாய் முடிந்தது. இதுவரைக்கும் வாண்டுகளைப் பற்றி. ஆனால் நேற்று நிகழ்வில் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தவர்கள் அந்த வாண்டுகளின் பெற்றோரே.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகளே ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும் எல்லா நிகழ்வுகளையும் முடிந்த பின் குழந்தைகளை அழைத்துக் கொள்ள சொன்னார். ஆனால் இரண்டையுமே பெற்றோர்கள் கேட்கவில்லை. ஒப்பனை அறைக்கு செல்வதும் பின் அரங்கிற்கு வருவதுமாய் ஒழுங்கீனத்தின் மொத்த உருவாய் இருந்தனர். 

அதே போல் போட்டோ எடுக்க வேண்டாம் . தனியாக சி டி மற்றும் போட்டோ தருகிறோம் என்று சொல்லி இருந்தனர். கேட்டனரா பெற்றோர்கள். தங்களிடம் இருந்த அனைத்து கருவிகள் மூலமும் போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போல், அவரவர் வீட்டுக் குழந்தைகள் மேடையில் வந்தால் மட்டுமே கை தட்டுவோம் என்று முடிவெடுத்தவர்களாய் ஜடம் போல் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் எந்தவித போட்டி உணர்வும் இல்லாமல் அழகாய் நிகழ்ச்சிகள் பண்ண , இவர்களே அவர்கள் மனதில் நச்சை ஊட்டிவிடுவார்கள் போல இருந்தது.

அதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.

திருந்துங்கள் பெற்றோர்களே !!!!

-அன்புடன் எல்கே

Advertisements

3 Comments »

  1. 1
    Sridhar Swaminath Says:

    Nicely written LK. Its sad that elders dont conduct themselves, as expected. Nice to learn about the school and its activities. Saraswathi Vidyalaya (Vadapalani and Nanganallur) also follow such practices.

  2. 2
    sundara Says:

    //அதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.//

    யாரும் திருந்துவதாய்த் தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் என்ன தலைபோகிற அவசரமென்று நானும் பலமுறை யோசித்ததுண்டு.

    திவ்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

  3. 3
    தானைத்தலைவி. Says:

    சொல்லு ! சொல்லு ! நன்னா ஒரைக்கனும். குழந்தை மேடையில் தோன்றியதும் அதைப்பார்த்து கைஆட்டி அதன் கவனத்தை திசைதிருப்புவது. “ஏன் அவனை இவர்கள் வீட்டில் பார்ப்பதே இல்லையா? மேடையில் தான் பார்க்கிறார்களா?”


RSS Feed for this entry

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: