நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்……


சென்ற வாரம் திருவேற்காடு சென்று வந்தப் பிறகே, வாரம் ஒரு கோவில் என முறை வைத்து சென்னையை சுற்றியுள்ள ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என நானும் என் திருமதியும் முடிவு செய்திருக்கிறோம். அதன் படி இந்த வாரம் சென்ற இடம் திருநீர்மலை.

வழி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை சென்றதில்லை. பம்மல் வரை தடுமாற்றமில்லாமல் சென்றுவிட்டோம். பிறகு திரும்பாமல் நேரே செல்ல வேண்டிய இடத்தில் திரும்பியதில் ஒரு கிலோ மீட்டர் அதிகப் பயணம். கிளம்பியதே ரொம்பத் தாமதமாகத்தான். இதில் இந்த மாதிரி தாமதங்களும் சேர்ந்துக் கொள்ள, சூரியன் நன்கு சுட்டெரிக்கத் துவங்கிய நேரத்தில் ஸ்தலபதியாகிய நீர் வண்ணப் பெருமாள் கோவிலை அடைந்தோம்.

கூட்டமே இல்லாதப் பெருமாள் கோவிலை இப்பொழுதுதான் பார்க்கிறேன். பெருமாள் சந்நிதியில் நாங்கள் மூவர் மட்டுமே. நின்று நிதானமாக ஏகாந்தமான தரிசனம். திருப்பதிப் பெருமாளை விட மூலவர் சிறிது சிறியவர்தான், உருவில்.  பிரம்மோத்சவம் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மூலவரை தரிசித்து வெளியே வரும் தருணத்தில் , உற்சவர் திருவீதி உலா சென்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரையும் தரிசித்து என் அலைபேசியில் அவரை சிறைப் படுத்திக் கொண்டு தாயார் சந்நிதிக்கு சென்றோம் .

 

நீர் வண்ணப் பெருமாள்

நீர் வண்ணப் பெருமாள்

தாயார் சந்நிதியில் தீபாராதனைக் காட்ட பட்டர் யாரும் இல்லை. சந்நிதியும் சார்த்தப் பட்டிருந்தது. வெளியில் இருந்து தாயாரை சேவித்து விட்டு கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவில் வெளியே இருந்த பந்தல் நிழலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொண்டு சென்ற நீர்மோரினால் தாக சாந்திப் பண்ணிக் கொண்டு, மலை மேல் ஏறத் துவங்கினோம். சூரியனின் கைவண்ணத்தில் , எங்கள் கால்கள் பொரிந்தன. விடு விடுவென  ஓட வேண்டியதாகப் போனது .

10247428_669367509795595_610080798967983542_n

மேலே இருக்கும் கோவிலிலும் ஏகாந்தமாய் தனிமையில் பள்ளிக் கொண்டிருந்தார் ரங்கநாதர். காலடியில் பூதேவியும் ஸ்ரீ தேவியும் அமர்ந்திருக்க அற்புதமான தரிசனம் அது.  ரங்கநாதரை தரிசனம் செய்து , உள்பிரகாரத்தை வலம் வந்தால், மூன்றடியால் உலகளந்த வாமனரையும் , சாந்த சுவரூபமாக அமர்ந்திருக்கும் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்யலாம். வெளியே இருந்த வெய்யிலின் உக்கிரத்தினால் வெளிப் பிரகாரத்தை வலம் வரவில்லை.

சிலக் கவலைகள்

 

பம்மல் தாண்டியப் பிறகு, வழி நெடுகும் , இருபது அடிக்கொன்று என்றக் கணக்கில் ஜப வீடுகளும், சர்ச்களும் முளைத்துள்ளன. பிருங்கி மலை பரங்கி மலை ஆகி தாமஸ் மவுன்ட் ஆனது போலும், மயிலைக் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது போலும் வரும் காலத்தில் திருநீர்மலைக் கோவில் பெருமாள் அல்ல அது இயேசு என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை,

நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்

தலைப்பிற்கான விளக்கம் , கீழே நின்றக் கோலத்திலும், மேலே பள்ளி கொண்டவனாய் கிடந்தக் கோலத்திலும், வாமனனாய் நடந்தக் கோலத்திலும் , நரசிம்மமாய் இருந்தக் கோலத்திலும் காட்சி அளிப்பதை இப்படி சொல்கிறார்கள். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று என அங்கிருந்த பட்டர் சொன்னார்.

சென்னைவாசிகள் நேரம் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்.

அன்புடன் எல்கே

Advertisements
%d bloggers like this: