நகரேஷு காஞ்சி


நகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது.  காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…

அருள்  பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .

அன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில் Kamatchiamman_T1

கைலாயநாதர் கோவில்

சென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ).  ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 

தஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.

IMG_20140501_081318 IMG_20140501_082855

இதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.

மஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..

அன்புடன் எல்கே

Advertisements
%d bloggers like this: