Archive for the ‘இந்து சமயம்’ Category

நகரேஷு காஞ்சி

மே 1, 2014

நகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது.  காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…

அருள்  பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .

அன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில் Kamatchiamman_T1

கைலாயநாதர் கோவில்

சென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ).  ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 

தஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.

IMG_20140501_081318 IMG_20140501_082855

இதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.

மஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..

அன்புடன் எல்கே

Advertisements

நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்……

ஏப்ரல் 20, 2014

சென்ற வாரம் திருவேற்காடு சென்று வந்தப் பிறகே, வாரம் ஒரு கோவில் என முறை வைத்து சென்னையை சுற்றியுள்ள ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என நானும் என் திருமதியும் முடிவு செய்திருக்கிறோம். அதன் படி இந்த வாரம் சென்ற இடம் திருநீர்மலை.

வழி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை சென்றதில்லை. பம்மல் வரை தடுமாற்றமில்லாமல் சென்றுவிட்டோம். பிறகு திரும்பாமல் நேரே செல்ல வேண்டிய இடத்தில் திரும்பியதில் ஒரு கிலோ மீட்டர் அதிகப் பயணம். கிளம்பியதே ரொம்பத் தாமதமாகத்தான். இதில் இந்த மாதிரி தாமதங்களும் சேர்ந்துக் கொள்ள, சூரியன் நன்கு சுட்டெரிக்கத் துவங்கிய நேரத்தில் ஸ்தலபதியாகிய நீர் வண்ணப் பெருமாள் கோவிலை அடைந்தோம்.

கூட்டமே இல்லாதப் பெருமாள் கோவிலை இப்பொழுதுதான் பார்க்கிறேன். பெருமாள் சந்நிதியில் நாங்கள் மூவர் மட்டுமே. நின்று நிதானமாக ஏகாந்தமான தரிசனம். திருப்பதிப் பெருமாளை விட மூலவர் சிறிது சிறியவர்தான், உருவில்.  பிரம்மோத்சவம் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மூலவரை தரிசித்து வெளியே வரும் தருணத்தில் , உற்சவர் திருவீதி உலா சென்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரையும் தரிசித்து என் அலைபேசியில் அவரை சிறைப் படுத்திக் கொண்டு தாயார் சந்நிதிக்கு சென்றோம் .

 

நீர் வண்ணப் பெருமாள்

நீர் வண்ணப் பெருமாள்

தாயார் சந்நிதியில் தீபாராதனைக் காட்ட பட்டர் யாரும் இல்லை. சந்நிதியும் சார்த்தப் பட்டிருந்தது. வெளியில் இருந்து தாயாரை சேவித்து விட்டு கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவில் வெளியே இருந்த பந்தல் நிழலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொண்டு சென்ற நீர்மோரினால் தாக சாந்திப் பண்ணிக் கொண்டு, மலை மேல் ஏறத் துவங்கினோம். சூரியனின் கைவண்ணத்தில் , எங்கள் கால்கள் பொரிந்தன. விடு விடுவென  ஓட வேண்டியதாகப் போனது .

10247428_669367509795595_610080798967983542_n

மேலே இருக்கும் கோவிலிலும் ஏகாந்தமாய் தனிமையில் பள்ளிக் கொண்டிருந்தார் ரங்கநாதர். காலடியில் பூதேவியும் ஸ்ரீ தேவியும் அமர்ந்திருக்க அற்புதமான தரிசனம் அது.  ரங்கநாதரை தரிசனம் செய்து , உள்பிரகாரத்தை வலம் வந்தால், மூன்றடியால் உலகளந்த வாமனரையும் , சாந்த சுவரூபமாக அமர்ந்திருக்கும் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்யலாம். வெளியே இருந்த வெய்யிலின் உக்கிரத்தினால் வெளிப் பிரகாரத்தை வலம் வரவில்லை.

சிலக் கவலைகள்

 

பம்மல் தாண்டியப் பிறகு, வழி நெடுகும் , இருபது அடிக்கொன்று என்றக் கணக்கில் ஜப வீடுகளும், சர்ச்களும் முளைத்துள்ளன. பிருங்கி மலை பரங்கி மலை ஆகி தாமஸ் மவுன்ட் ஆனது போலும், மயிலைக் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது போலும் வரும் காலத்தில் திருநீர்மலைக் கோவில் பெருமாள் அல்ல அது இயேசு என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை,

நின்றான், கிடந்தான்,இருந்தான்,நடந்தான்

தலைப்பிற்கான விளக்கம் , கீழே நின்றக் கோலத்திலும், மேலே பள்ளி கொண்டவனாய் கிடந்தக் கோலத்திலும், வாமனனாய் நடந்தக் கோலத்திலும் , நரசிம்மமாய் இருந்தக் கோலத்திலும் காட்சி அளிப்பதை இப்படி சொல்கிறார்கள். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று என அங்கிருந்த பட்டர் சொன்னார்.

சென்னைவாசிகள் நேரம் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்.

அன்புடன் எல்கே

திருவேற்காடு – கருமாரியம்மன்

ஏப்ரல் 14, 2014

நேற்று உறவினர் ஒருவரை சந்திக்க, அம்பத்தூர் வரை செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த கிளம்பி அம்பத்தூர் எஸ்டேட் தாண்டும் வரை வேறு எங்கும் செல்லும் என்னமோ திட்டமோ இல்லை. எஸ்டேட் தாண்டி ஓ டி செல்லும் வழியில் திருவேற்காடு செல்லும் சாலை வரும். அங்கு ஒரு தகவல் பலகை வைத்திருந்தார்கள். எதேச்சையாக அதைப் பார்த்தவுடன் மனம் விரைவாக திட்டமிட ஆரம்பித்தது. உறவினர் வீட்டிற்கு சென்றவுடன், முதல் வேலையாக மொபைலில் நோண்டி வழியும் தொலைவும் பார்த்துக் கொண்டேன்.

நன்றி : இணையம்

பின், கதிரவன் கீழிறங்கத் துவங்கிய வேளையில் அங்கிருந்து கிளம்பி , ஒரு அரை மணி நேரத்தில் திருவேற்காடு சேர்ந்தோம். குளக்கரையில் வண்டியை பார்க் செய்து விட்டு , வந்தால் முதல் சோதனை. குளத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு, கோவில் பிரதான வாயில் எதிரே சேற்றுத் தண்ணீர். எதோ பைப் உடைந்துள்ளது. அதை சரி பண்ண யாருக்கும் நேரமில்லை போல. காலைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு சகதி.  பின் அங்கிருந்தவர்கள் , பக்கவாட்டில் இருந்து மற்றொரு வழியைக் காட்ட, அதன் வழியாக உள்ளே நுழைந்தோம்.

நன்றி ; இணையம்

நன்றி ; இணையம்

கோவில் உள்பிரகாரத்தினுள் நுழைந்தவுடன் முதலில் காட்சி அளித்தவர், ஷண்முகன். உத்திரத்தன்று உள்ளே நுழைந்தவுடன் முருகன் தரிசனம். வேறென்ன வேண்டும்…முருகனை மனமாரக் கும்பிட்டு மேற்கொண்டு நடந்தால், மரச்சிலை அம்மன் சன்னிதி. இது அம்மனின் உற்சவரா , இதன் பின் உள்ள கதை என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அம்பாளின் கண்கள்  இதை வர்ணிக்க அந்த காளிதாசன்தான் வரவேண்டும். என்ன ஒரு வாத்சல்யம் அந்தக் கண்களில்.. கருணைப் பொங்கும் கண்கள் என்பார்களே அதற்கு அந்தக் கண்கள்தான் உதாரணம். இந்த நொடி வரை அவ்விருக் கண்களும் என் நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை நேரம் நின்றாலும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அந்த முகம். பின் மெதுவாய், வரிசையில் நின்று அம்பாளைத் தரிசனம் செய்தோம். மிக அற்புதமான தரிசனம். எந்த வித விரட்டல்களும் இல்லாமல் , நின்று நிதானமாய் தரிசித்தோம்.

கிளம்பும் தருவாயில் பார்த்தது, கோவிலின் ஒரு மூலையில் புதிதாய் கட்டியது போல் இருந்த பெருமாள் சன்னிதி . சகலாபரண பூஷிதராக  நின்றுக் கொண்டிருந்த பெருமாளையும் , அங்கிருந்த சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமரையும் தரிசித்து, பின் இருட்டும் தருவாயில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

திருவேற்காடு போகும் எந்த விட திட்டம் இல்லாமல் இருந்தவர்களை அழைத்து , அற்புதமான தரிசனம் செய்வித்தது அந்த அம்பாளேதான்…

அடுத்த வாரம் திருநீர் மலை அல்லது சிறுவாபுரி முருகன் கோவில் செல்ல எண்ணம் வைத்துள்ளேன். இறைவன் அருள் எப்படி உள்ளதோ….

அன்புடன் எல்கே

இந்து சின்னங்களுக்கு தடை – இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்

ஜனவரி 25, 2014

இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார்பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில்ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களைக் குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏற்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன்அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.

 • மதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா?
 • மதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே! இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை?
 • மதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்?
 • எந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன? இதைத் தூண்டியவர்கள் யார்? சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்?
 • இந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா?
 • இவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும்
 • தூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
 • இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா?
 • கலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா?
 • தண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்டுவர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.

 • அம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை
 • பாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்
 • அழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு
 • சுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
 • புதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
 • முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும்
 • தடுப்பதில்லை.
 • பெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே!

இராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.

 இராமநாதபுரத்தை காக்க வீரத்துறவி.ஐயா. இராம.கோபாலன் அவர்களின் அறைகூவல்

இந்தக் கட்டுரை திரு பால கௌதமன் அவர்களால் எழுதப்பட்டு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இணையத் தளத்தில்  வெளிவந்துள்ளது