Archive for the ‘பயணக் குறிப்புகள்’ Category

நகரேஷு காஞ்சி

மே 1, 2014

நகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது.  காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…

அருள்  பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .

அன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில் Kamatchiamman_T1

கைலாயநாதர் கோவில்

சென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ).  ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 

தஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.

IMG_20140501_081318 IMG_20140501_082855

இதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.

மஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..

அன்புடன் எல்கே

Advertisements

பயணக் குறிப்புகள் – 2

பிப்ரவரி 11, 2014

பத்துமணிக்கு வந்த டாக்சியில் சென்று எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்,. எழும்பூருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள்.. இந்த கால சென்னையின் பரபரப்பை பிரதிபலிப்பதாய் இருபத்தி நான்கு மணிநேரமும் மக்கள் கூட்டமும், இரைச்சலும் நிறைந்து காணப்படும் சென்ட்ரல். எழும்பூரோ  பரபரப்பில்லாத ஆரவாரமற்ற நகரம் போல் தோற்றமளிக்கிறது. எந்த நேரத்தில் சென்றாலும் எழும்பூரில் பரபரப்பு இருக்காது . அன்றும் அப்படிதான் விடுமுறை நாளன்று  நிதானமாய் சோம்பலுடன்  எழுந்திருக்க மனமில்லாமல் படுத்தே இருப்பவர்களை போன்று இருந்தது எழும்பூர் ரயில் நிலையம். ஏழாவது பிளாட்பாரத்தில் யாரும் சீண்டாத முதிர் கன்னியை போல் நின்றுக் கொண்டிருந்தது சேலம் எக்ஸ்பிரஸ் .

 

நான் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு , வண்டியில் விளக்குகள் “ஆன்” செய்யப்பட்ட பிறகு எனக்கு ஒதுக்கபட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். கீழ்  இருக்கை வயதானவர்களுக்குதான் சரி பட்டுவரும். காற்று சரியாக வராத நிலையில் கொடுமையாக இருக்கும் பயணம். தூக்கமும் வரவில்லை காற்றும் வர வில்லை. எனக்கு எதிர்புற வரிசையில் ஒரு நாற்பது வயது பெண்மணி. சிறிது நேரம் கழித்து கணவன் மனைவி போன்று தோற்றம் அளித்த இருவர் வந்தனர்.வந்ததில் இருந்து பேசிக் கொண்டே இருந்தனர். அடுத்தவர்களை கவனிப்பது தவறு என்பார்கள். ஆனால் அவர்களின் பேச்சு அவர்களை கவனிக்க தூண்டியது. உரக்கவும் இல்லாமல் , மெதுவாகவும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இடை இடையில் அந்தப் பெண் கண் கலங்குவது நன்றாகத் தெரிந்தது. மொபைலில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பேசிக் கொண்டே  அவர்களையும் நடு நடுவே பார்த்துக் கொண்டே பயணத்தைத் துவங்கினேன்.

மெதுவாய் துவங்கிய ரயிலின் ஓட்டம் , தாம்பரம் தாண்டியப் பின் வேகமாய் மாறியது. செங்கல்பட்டு தாண்டும் வரை விழித்திருந்த என்னை, நித்ராதேவி தழுவ தூங்கத் துவங்கினேன். அப்பொழுதும் அந்த தம்பதியரின் பேச்சு தொடர்ந்துக் கொண்டேதான் இருந்தது. பார்த்தால் தம்பதிகள் போல் இருந்த அவர்கள் , சேலம் டவுன் ஸ்டேஷனில் இறங்கி ஆளுக்கொரு திசையில் பயணப் பட்டனர். அப்படி என்னதான் பேசினார்களோ , எனக்குத் தெரிந்து விடியும்வரை அவர்கள் பேச்சு தொடர்ந்துக் கொண்டேதான் இருந்தது.

இது ஒரு அனுபவம் என்றால், ஒரு முறை திருச்சிக்கு குடும்பத்துடன் சென்றது இன்னொரு வகையான காமெடி அனுபவம் என்றே சொல்லலாம்.

பொதுவாய் தனியார் பேருந்தில்தான் பயணம் செய்வேன். அந்த முறை அணைத்து தனியார் பேருந்துகளிலும் டிக்கெட் காலி. எனவே அரசுப் பேருந்தை தஞ்சம் அடைந்தேன். பொதுவாய் ஐ ஆர் சி டி சி ஆகட்டும் ரெட் பஸ் தளமாகட்டும் இருபத்திநான்கு மணிநேர பார்மேட்டில்தான் நேரத்தை குறிப்பிடுவார்கள். இங்கு தலை கீழ். அவர்கள் குறிப்பிடிருந்த நேரத்தை பார்க்கவில்லை.  இரவு பேருந்து நிலையத்திற்கு சென்று காத்திருந்தோம், பேருந்தும் வந்தது. ரிசர்வேசன் லிஸ்ட்டில் பெயரில்லை. எப்படி இருக்கும் இரவு பத்து மணிக்கு புக் பண்றதுக்கு பதிலா காலை பத்து மணிக்கு புக் பண்ணி இருந்தேன்.

வேறு ஒரு பேருந்தை பிடித்து திருச்சியும் கிளம்பியாச்சு. விழுப்புரம் தாண்டி அந்தப் பேருந்து , அந்த கால படிதாண்டா பத்தினி போல் விழுப்புரத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடித்து அங்கேயே நின்று விட, பிறகு அவர்கள் ஏற்றி விட்டப் பேருந்தில் ஒரு வழியாய் கஷ்டப்பட்டு திருச்சி போய் சேர்ந்தோம். இப்பொழுது திருச்சி சென்றாலும் எங்களால் மறக்க இயலாத பயணம் இது.

பயணங்கள் தொடரும்…

அன்புடன் எல்கே

 

 

 

 

 

 

 

பயணக் குறிப்புகள் – 1

திசெம்பர் 17, 2013

நம் வாழ்நாளில் எத்தனையோ முறை பயணம் செய்கிறோம்.போகின்ற இடங்களைப் பற்றி எழுதுகிறோம்.பயண அனுபவம் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. அப்படியே எழுதினாலும் கடன்காரன் வண்டியா ஓட்றான் என இரண்டு வசனங்களுடன் அடுத்த ஊருக்கு தாவி விடுவோம்.

கல்லூரி காலத்தில் இருந்தே பேருந்துப் பயணம் மனதிற்கிசைந்த ஒன்றாய் அமைந்த ஒன்று. ஏ ஆர் பி பேருந்தில் துவங்கி நேற்று என்னை திருச்சியிலிருந்து நனைத்துக் கொண்டு வந்த அரசுப் பேருந்து வரே பலவித அனுபவங்கள்.

பொதுவாய் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் எளிதில் பேசிவிடலாம். அரசுப் பேருந்துகளில் மிகக் கடினம்.

என் பயண அனுபவங்களை இங்கு பகிரப் போகிறேன்

2000ஆம் வருஷத்துக்கு முன் திருச்செங்கோடு சேலம் வழியில் பயணித்தவர்களுக்கு ஏஆர்பி பஸ் நன்கு பரிச்சயமான ஒன்று. அந்த வட்டாரத்தில் ஹைடெக் பாடி இவர்களுடையதுதான்.

காலை 8.40க்கு சேலம் புதியப் பேருந்து நிலையத்தில் கிளம்பி 9.40க்கு எங்கள் கல்லூரியை அடையும். தினமும் வரும் மாணவர்களுக்கும்,சில வங்கி அலுவலர்களுக்கும் சலுகை விலையில் டிக்கெட் உண்டு.அப்படியும் கூட சில நாள் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது உண்டு.

இந்த பஸ்ஸிற்கு ஐந்து நிமிடம் பின்னால் வேறு ஒரு கம்பெனியின் தனியார் பேருந்து.சில சமயம் வண்டி எடுக்கும் நேரம் குறித்து சண்டை நடக்கும். தமிழகத்தின் பிற நகரங்களில்
இருப்பவர்களுக்கு இது பழக்கமாக இருக்கும்.சென்னையில் இருப்பவர்களுக்கு பேருந்து வந்தாலே போதும் என்பதால் இதெல்லாம் தெரியவாய்ப்பில்லை.

அப்படிப் பட்ட ஒரு சுபநாளில் சினிமாக்களில் பார்க்கும் சேஸிங் நாங்கள் பங்கேற்க அரங்கேறியது. சேலம் மூன்று ரோடு சந்திப்பில் துவங்கியது இந்தப் பந்தயம்.

இரண்டு பேருந்துகளும் கிட்டதட்ட 40 கிமீட்டர் வேகத்திற்கு மேல் போட்டிப்போட்டுக் கொண்டு வீரபாண்டி ரோட்டில் பறந்தன.

இரண்டுப் பேருந்துகளிலும் சேர்த்து நூறு பேர் இருந்திருப்போம். அந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை அல்ல.இருபுறமும் வயல்கள் இருக்கும் கிராமத்து சாலை,சில இடங்களில் மிக குறுகலாக இருக்கும்.

அன்று ஏஆர்பி பஸ்ஸை ஓட்டியது செந்தில்.மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ரெயின்போ பஸ் நிற்க, அதன் பின்னே வந்த ஏஆர்பி,அந்த பஸ்ஸை முந்தி சென்று நிறுத்தும் பொழுது அந்தப் பேருந்தின் கண்ணாடியை வேண்டுமென்றே இடித்து நிறுத்த சண்டைத் துவங்கியது.

அப்புறம் என்ன போலிஸ் பஞ்சாயத்து என அன்றைய தினம் காலேஜ்க்கு கட் .

பயணிகளுக்குக் கிட்டத்தட்ட எமனான அதே வேகம்தான் வேறு ஒரு நாள் அந்தப் பகுதியில் ப்ரச்சனையால் பேருந்துகளை நிறுத்த இருந்த சமயம் எங்களை அதில் மாட்டாமல் சேலம் திரும்ப
உதவியது.

எங்கள் கல்லூரி வாழ்வில் இரண்டறக் கலந்தது ஏஆர்பி.பிப்ரவரி 14 நடைபெறும் பேருந்து தினத்திற்கு பேருந்து பணியாளர்களுக்கு புதிய உடை,அவர்களுக்கு பரிசு,ரெகுலராக வருபவர்களுக்கு பரிசு என மகிழ்ச்சியாக நடக்கும்.

அடுத்து வேறு ஒருப் பயணத்தில் நாளை சந்திப்போம்…

பயணம் தொடரும்….