Archive for the ‘பொது’ Category

இரண்டு சந்தேகங்கள்…

ஜூன் 1, 2014

இன்று என் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காலையில் முதலில் கோவிலுக்கு சென்றோம். ரொம்ப மாதமாக போக வேண்டும் என்று நினைத்த , கோடம்பாக்கம் சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றோம்.  வடபழனியில் இருந் செல்லும் பொழுது கோடம்பாக்கம் பாலம் ஏறுவதற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் , பிரம்மாண்டமான கோபுரத்துடன் எழுந்தருளி இருக்கிறாள் அம்பாள்.

 

கால் முட்டி வலி உடையவர்கள் ஏற அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த படிக்கெட்டுகளில் ஏறி  உள்நுழைந்தால் , பிரம்மாண்டமான தியான மண்டபம். வரிசையாக ஸ்ருங்கேரி மடாதிபதிகளின் படங்கள் இருந்தன. அங்கு வேறு யாரையும் காணவில்லை. இடப்புறம் இருக்கும் படிக்கெட்டுகளில் ஏறி அடுத்த தளத்திற்கு சென்றால், உள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வேழமுகத்தோன்.  விநாயகர் சந்நிதிக்கு இடப்புறம், ஹாலின் நடுநாயகமாய் அம்பாள் வீற்றிருக்கிறாள். காண்போர் மனதை கொள்ளைக் கொள்ளும் விதமாய் இருந்த சாரதாம்பாளை வணங்கி விட்டு அடுத்து நகர்ந்தால் இறுதியாய் ஏழுமலையான் மலையில் இருந்து இறங்கினாலும் இங்கே உயரத்தில்தான் நிற்பேன் என்று நின்றுக் கொண்டிருக்கிறான். அளவாய் மூன்றே சந்நிதிகள். காலை பதினோரு மணிக்கு முன்பு செல்லுங்கள். பதினோரு மணிக்கு நடை சாத்திவிடுகிறார்கள்.

இப்ப தலைப்புக்கு வரேன்….

சுப்பிரமணிய சுவாமியினால் புகழ்பெற்ற அந்த கடையின் தி நகர் கிளையில் சாப்பிட சென்றோம். உணவின் ருசி , விலை பற்றி பிரச்சனை இல்லை. அந்தக் கடையினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சிறு மேடை இருக்கும். அதில் இனிப்பு/சிப்ஸ் போன்றவை இருக்கும். அதற்கு இடதுபுறம் பில் போடும் மேஜை. இரண்டிற்கும் இடையில் சிறு இடைவெளி உள்ளது. அதில் ஒரு பெண்  ஒரு காலை தொங்கவிட்டு ஒரு காலை மடித்து  கொஞ்சம் திரும்பிய வாக்கில் உக்காந்திருந்தாள். நாள் முழுக்க அப்படிதான் உக்காரணும்… நேராய் உட்கார்ந்தால் காலை மடிக்க இயலாது தொங்க விட இயலாது . வேலை செய்பவர்கள் கொஞ்சம் வசதியாய் உட்கார வசதி செய்துக் கொடுத்தால் லாபம் குறைந்து விடுமோ ??

 

அடுத்த சந்தேகம், இந்த நகைக் கடையில் வேலை செய்யும் பெண்கள் எப்படி ஒரே வார்ப்பில் வடித்தவர்கள் போல் உள்ளனர். தேர்வு செய்யும் பொழுதே, ஒல்லியாக எலும்பும் தோலுமாய் இருப்பவர்களைத்தான் தேர்வு செய்வார்களோ ?? இல்லை தேர்வு செய்தபின் டயட் இருக்க சொல்லி மாற்றி விடுவார்களா ?

 

எதோ ஒரு கதை (குமுதம் / ஆவி ??)  வாத்யார்  எழுதியது . சேட்டுகள் தங்கள் கடைகளில் வேலை செய்யும் பெண்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாய் இருப்பார்கள். அதிக கவனம் ஈர்க்காத கொஞ்சம் ஒல்லியாய் மாநிறமாய் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்ற ரீதியில் வரும். எந்தக் கதை என மறந்து விட்டது .

 

இங்கும் அது போல் இருக்குமோ ??

 

அன்புடன் எல்கே

Advertisements

6174 கதாப்பாதிரங்களைப் பற்றி – I

பிப்ரவரி 9, 2014

சுதாகர் கஸ்தூரி எழுதிய 6174 நாவலில் வரும் முக்கியக் கதாபாதிரங்களைப்  பற்றி சிறிது பார்ப்போம்…

இந்த நாவலில் கதைதான்  நாயகன்.. தனியாக இவர்தான் கதாநாயகன் என இயலாது. ஜானகியும் ,அனந்தும்  முக்கியப் அங்கு வகித்தாலும் அவர்கள் நாயக  நாயகியர் இல்லை.

ஜானகி :
இந்த நாவலின் மிக முக்கியக் கதாபாத்திரம் ஜானகிதான். திருவனந்தப்புரத்தில் மல்லிகை வைத்து வியர்வை மணத்தை  மாற்றியது பின் அதேப்  பூவை அனந்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் விமானத்தில் தூக்கி எறிந்தது . இந்த இரண்டும் அவர்களை எதிரணி ஆட்களிடம் இருந்துக் காப்பாற்றியது.
காதலில் தோல்வி பின் திருமணத்திலும் தோல்வி என தோல்விகளால் தொடர்கதையாக தன்னை முழுமையாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஜானகி , அனந்துடன்  தொடர்ந்து மோதினாலும் , பின் இறுதியில் இணைவது ஒரு வகையில் தமிழ் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதேப்  போல் , இறுதியில் அனந்தை  ரவியிடம் இருந்து காப்பாற்ற தனியாக போவதும் திரைப்படக் காட்சி போல் இருந்தது.
தோல்வியில் இவரதுக் கதை   துவங்கினாலும் இறுதியில் அனந்துடன் இணைகிறார்.
தேவராஜ் 
இந்தக் கதையில் மிக பலவீனமானக் கதாபாத்திரம் தேவராஜ் தான். அறிமுகம் ஆகும் காட்சியில் இருந்து இவரது மேல் படிப்பவர்களுக்கு  சந்தேகம் வந்துக் கொண்டே இருப்பதால் , தேவராஜின் பெயரில் இருப்பது எதிரணியின் ஆள்  எனத் தெரிய வரும்  இடத்தில் பெரிதாய் அதிர்ச்சி ஏற்படுவதில்லை.
ஒரு ரகசியமான ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் ஒருவர் எப்படியும் தொடர்ந்து அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பார் . அப்படி இருக்கையில் திடீரென்று ஆள்மாறாட்டம் செய்வது  எளிதா ??
அனந்த்  
இந்தக் கதையின் முக்கிய நபர். இவரது வாயிலாகத்தான் ஒவ்வொரு முடிச்சும் அவிழ்கிறது. ஆனாலும் மியான்மார் செல்லும் பொழுதும் இவரது சந்தேகம் இவருடன் பயணிக்கிறது .  துவக்கத்தில் இருந்தே பாதி நம்பிக்கையுடன் செயல்படும் அனந்த் , லோனாரில் (பூரியில் ??) கிடைக்கும் தமிழ்  புதிர் மூலம், பிரமீட்  தன மூலம்தான் கிடைக்கும் எனத் தெரிந்துக் கொண்டாலும் , அதன் பின்னும் சில இடங்களில் அவ நம்பிக்கையுடன் நடந்துக் கொள்வதைத் தவிர்த்திருக்கலாமோ ??
இன்னும் வரும்….
அன்புடன் எல்கே

ஈடுபாடு

பிப்ரவரி 4, 2014

கடந்த வாரம் தெரிந்தவர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். ஹோமமும் விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனால் எந்த நோக்கத்திற்காக ஹோமம் செய்யப்பட்டதோ அது நிறைவேறியதா எனத் தெரியவில்லை. ஹோமமும் சரி பூஜைகளும் சரி, செய்து வைக்கின்ற குருவும் செய்கின்ற கர்த்தாவும் மனமுகந்து வேறு சிந்தனையில் ஈடுபடாது ஹோமத்திலும் / பூஜையிலும் மட்டுமே மனம் செலுத்தி செய்யவேண்டும்.

இந்த நிகழ்விலும் மட்டுமல்ல , பல்வேறு இடங்களில் நான் கண்டதுதான் இவை. குரு ஹோமம் செய்துக் கொண்டிருக்க , யாருக்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறதோ அவர்கள் , தங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருப்பார்கள். சங்கல்பம் முடிந்தவுடன் மனையில் இருந்து எழுந்தால் மீண்டும் பூர்ணாஹுதி சமயத்தில் மட்டுமே மனைக்கு வர வேண்டியது. கணவன் மனைவி இருவருமே மனையில்தான் அமர வேண்டும் . மனைவி இல்லாமல் கணவன் மட்டும் அமர்ந்திருந்தாலும் எந்த வித பிரயோஜனமும் இல்லை.

இப்படி முழு ஈடுபாடுடன் செய்ய இயலாது என்றால் இந்த சம்பிரதாயங்களை செய்யாதீர்கள். ஈடுபாடு இல்லாமல் செய்வதற்கு செய்யாமல் இருப்பதே மேல். வருபவர்களை கவனிக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ள மற்றவர்கள் உள்ளார்கள். இல்லையென்றால் இந்த வைதீகக் காரியங்களுக்கு ஒரு நாளும் , மற்றொருவருக்கு ஒரு நாளுமாக இரண்டு நாட்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

அரைகுறையாக எந்த வித வைதீகக் காரியங்களையும் செய்ய வேண்டாம்

அன்புடன் எல்கே

காணவில்லை – ஆம் ஆத்மி

ஜனவரி 16, 2014

ஆம், ஆம் ஆத்மி , நாங்கள் உங்களைப் போன்று சாதாரணர்கள் என்று சொல்லி கட்சியை ஆரம்பித்தவர்கள், தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிப் பெற்றவுடன் ,மெதுவாய் காணாமல் போகத் துவங்கி விட்டனர். முரண்பாடுகளில் மொத்த உருவமாய் விளங்கும் அர்விந்த் கேஜ்ரிவாலின் அன்றாட நடவடிக்கை தில்லி மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாய் இல்லை.

பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் எக்காலத்திலும் கூட்டுவைக்கமாட்டேன் என்று தன் பிள்ளைகளின் மீது சத்தியம் செய்தார் இந்த சத்தியசீலர். ஆனால் என்ன நடந்தது ? எந்தக் காங்கிரசை எதிர்த்துக் கடுமையாய் பிரச்சாரம் செய்தாரோ அதேக் காங்கிரஸின் ஆதரவில் அரியணை ஏறினார்.

கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றிருந்தால் பதவி ஏற்பு விழாவுக்கான செலவுக் குறைவாய் இருந்திருக்கும். மக்களில் ஒருவராய் தன்னைக் காட்டிக் கொள்ள ராம் லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்தினார்.விளைவு ஒரு தினக் கூத்துக்கு பல லட்சங்கள் செலவு.

அடுத்து அனைவருக்கும் இலவசக் குடிநீர் என்றுக் கூறினார். இப்பொழுது மீட்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவசம் அதே போன்றுதான் மின்சாரக் கட்டணக் குறைப்பும். கோடைக் காலங்களில் தில்லியில் குளிர்சாதன கருவி இல்லாமல் இருக்க இயலாது. அப்பொழுது கண்டிப்பாய் 400 யூனிட்களுக்கு மேல் உபயோகம் இருக்கும். அதற்க்கு கட்டணம் இப்பொழுது இருப்பதை விட இரு மடங்காகும் .

இவரது கட்சியில் இருப்பவர்கள் எத்தகையவர்கள். பிரசாந்த் பூஷன் , வெளிப்படையாக தனி காஷ்மீர் கேட்பவர்களை ஆதரிப்பவர். இப்பொழுது நக்ஸல்களின் ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்துவிட்டனர். வெளிப்படையாக நக்சல்களை தனி கட்சியில் இணைய சொல்லி அழைக்கின்றனர் இவரதுக் கட்சித் தலைவர்கள். இந்தியாவின் பாதுகாப்பு காஷ்மீரின் நிலையைப் பொறுத்தே உள்ளது. இன்று தனிக் காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் இவர்கள் நாளை சீனாவின் ஊடுருவலையும் ஆதரிக்கக் கூடும்.

ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த இவர்களின் தமிழகக் கிளை உறுப்பினர்கள் மேல் தினம் ஒரு குற்றசாட்டு வந்த வண்ணம் உள்ளது. இதில் தலைமையின் நிலை என்ன எனத் தெரியவில்லை. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதத்தில்,உட்கட்சிப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில எம் எல் யே க்கள் ,தலைமை மீது குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னால் முதல்வர் மீது இவர்கள் ,பிரச்சாரத்தின் பொது பல லஞ்சப் புகார்களை சொன்னார்கள். அதை வைத்து ஆட்சியையும் பிடித்தனர். ஆனால் இப்பொழுது ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்று நம்மைக் கேட்கின்றனர். கட்சி ஆரம்பித்து எதை கற்றாரோ இல்லையோ அரசியல் செய்வதில் நன்குத் தேறியுள்ளார் கேஜ்ரிவால்.

இன்று போலிஸ் அதிகாரியை விமர்சித்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளார் கேஜ்ரிவால்.. முதல்வராய் இருப்பவர் இப்படி பொதுவில் ஒரு அரசு அதிகாரியை எச்சரிப்பது சரியல்ல. அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது.

சரித்திரத்தில் படித்த துக்ளக் ஆட்சி இன்று நம் கண் முன்னே நடக்கிறது. இந்த நாட்டை இப்படிப்பட்டவர்களிடம் இருந்து அந்த ராமன்தான் காப்பாற்ற வேண்டும்

சர்வீஸ் சென்டர், கால் சென்டர் மற்றும் வைகுண்ட ஏகாதசி ….

ஜனவரி 12, 2014

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கால் சென்டரில் வேலைப் பார்த்த அனுபவம் இருப்பதால், எதோ ஒரு கால் சென்டரை அழைத்து லைனில் வெகு நேரம் காத்திருந்தாலும் நான்  பொதுவாய் கோபப் படுவதில்லை . நேற்று ஒரு விவரம் வேண்டி பியுரிட் நிறுவனத்தின் கால் சென்டரை அழைக்க நேர்ந்தது .

images

எதிர் பக்கம் லைனை அட்டென்ட் செய்தது ஒரு இளம் பெண் . அநேகமாய் புதிதாய் வேலைக்கு சேர்ந்தப் பெண்ணாக இருக்க வேண்டும்.

நான் : என் பேர் கார்த்திக்.  தி நகரில் இருந்து பேசறேன். இங்க தி நகரில் இருக்கும் உங்க டீலர் அட்ரஸ் கொடுங்க

கா.பெ : தரேன் சார். உங்க பேரு சொல்லுங்க (????)

நான் : கார்த்திக்

கா.பெ : நீங்க எங்க இருந்து பேசறீங்க

நான் : சென்னை தி நகர்ல இருந்து பேசறேன்

கா.பெ : உங்க நம்பர் சொல்லுங்க

நான் : XXXXXXXXXX

கா .பெ : உங்களுக்கு எப்படி உதவலாம் (???? இங்கதான் எனக்கு லைட்டா கோபம் வர ஆரம்பிச்சது )

நான் : தி நகர்ல இருக்க டீலர் அட்ரஸ் சொல்லுங்க

கா.பெ : கொஞ்சம் லைன்ல வெய்ட் பண்ணுங்க. தி நகர் சர்வீஸ் சென்டர் நம்பர் தரேன் . ( இன்னும் வாங்கவே இல்லை அதுக்குள்ளே சர்வீஸா ?)

நான் : சர்வீஸ் சென்டர் இல்லைங்க. டீலர் அட்ரஸ்

கா.பெ : சாலிகிராமத்துல ….

நான் : நான் தி நகர் டீலர் அட்ரஸ் கேட்டேன்

கா.பெ : இல்லை சார்.. சாலி கிராமத்தில்….

லைனை கட் பண்ணிட்டேன்..

ஒண்ணா ஒழுங்கா கொடுத்திருக்கற ஸ்க்ரிப்ட்டை உபயோகப்படுத்தனும். இல்லைனா கஸ்டமர் என்ன கேட்கறாங்கன்னு ஒழுங்கா கவனிச்சு பதில் சொல்லனும். ரெண்டுமே இல்லாட்டி கால் சென்டர் வேலைக்கு சரிபடாது.

இந்த உரையாடல் தி நகரில் மிக்சி ரிப்பேர் செய்யக் கொடுத்துட்டு காத்திருந்த நேரத்தில் நடந்தது.அந்த சர்வீஸ் சென்டர் அதுக்கு மேல. உள்ளே நுழைந்தவுடன் டோக்கன் வாங்கனுமாம். அதை எங்கயும் சொல்லலை . குறைந்தபட்சம் அங்க ஒட்டியிருக்கற விளம்பரத்துக்கு பக்கத்தில் ஒரு பிரிண்ட் அவுட்டில் போட்டிருக்கலாம். கவுன்டர்ல போய் கேட்டாதான் டோக்கன் வாங்கனும்னு சொல்றாங்க. அதுக்கப்புறமும் உங்க டோக்கன் எப்ப வரும்னு நீங்களா கவுன்டர் பக்கத்தில் பொய் விசாரிக்கணும் . இல்லாட்டி உக்காந்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

index

நான் இதே சர்வீஸ் துறையில் இருப்பவன் .  நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அதில் எங்கள் கிளையன்ட் எதிர்பார்க்கும் வசதிகள் என்ன, எந்த மாதிரி வாடிக்கையாளருக்கு மேலும் வசதிகள் செய்துத் தரலாம் என புதிது புதிதாய் என்று யோசிக்கிறோம். ஆனால் ஒரு இந்தியக் கம்பெனியில் இப்படி வாடிக்கையாளருக்கு வசதி இல்லாமல் ஒரு சர்வீஸ் சென்டர் வைப்பது பிரயோஜனம் இல்லை.

நீங்கள் எவ்வளவு நன்றாக ஒரு பொருளை சர்வீஸ் செய்தாலும், சர்வீஸ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளருக்கு எத்தகைய வசதிகள் செய்துத் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் உங்கள் சர்வீஸை மதிப்பீடு செய்வார்கள். அதை இந்தியக் கம்பெனிகள் உணர வேண்டும்.

மதியம் பெருமாள் கோவிலில் ஆரம்பித்த நகர்வலம் ஒருவழியா நாலு மணிக்கு முடிஞ்சது. பெருமாள் கோவிலில் நல்ல நிம்மதியான தரிசனம். ஆனாலும் ஒரு ஏமாற்றம். கோவிலில் நுழையும் பொழுதே சர்க்கரைப் பொங்கல் வாசம் மூக்கைத் துளைத்தது . சரி பிரசாதம் வாங்கறப்ப ரெண்டு தொன்னை வாங்கலாம்னு போனா அங்க இருந்தது அரிசி உப்மா…

பெருமாளே!!!!!!

 -அன்புடன் எல்கே

காட்சிகள்

ஜனவரி 1, 2014

நேற்று மனைவியும் மகளும் ஊரிலிருந்து வந்தனர். அவர்களை அழைத்து வர சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தனர். வழக்கமாய் கோவை எக்ஸ்ப்ரஸ் சரியான நேரத்துக்கு வந்ததாய் எந்த வித சாட்சியும் இல்லவே இல்லை. எனவே அதற்கு ஏற்றார் போல் சிறிது தாமதமாய்தான் கிளம்பினேன். அப்பவும் இன்னும் தாமதமாகத்தான் வந்தது கோவை. சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் திரும்பி வரும் வழியில் கண்ணில் பட்ட சிலக் காட்சிகள்

காட்சி  1

சென்ட்ரல் ஸ்டேஷன் பிரதான நுழைவாயிலில் இருக்கும் லக்கேஜ் ஸ்கேனர் எதற்கு வைத்திருக்கின்றனர் எனத் தெரியவில்லை. கடந்த வாரம் அவர்களை வழியனுப்ப வந்த பொழுது இடத்திற்குக் கேடாய் அணைத்து வைத்திருந்தினர். இப்பொழுது அதற்குக் காவலாய் துப்பாக்கிய ஏந்திய போலீசார் இருவர். வரும் யாரையும் கண்டுகொள்ளவுமில்லை. எதையும் சோதிக்கவுமில்லை. பின் எதற்கு அங்கு வெட்டியாய் அந்த இயந்திரம் எதற்கு ?

காட்சி  2

ரயில் வரக் காத்திருந்த நேரத்தில் பொழுது போகாமல் , அருகில் இருப்பவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். தன்பாத் செல்லும் வண்டிக்காகக் காத்திருகின்றனர் என அவர்கள் பேச்சில் இருந்துத் தெரிந்தது. அந்தக் குடும்பத்தில் பதினாறு அல்லது பதினேழு வயதுப் பெண்கள் இருவர். நவ நாகரீகத்தில் ஊறிய பெண்கள் என்பது அவர்கள் உடையிலேத் தெரிந்தது. முட்டிக்கு சிறிது கீழே வரும் முக்கால் பேண்ட். எதோ ஆங்கில வாசகம் எழுதிய டீஷர்ட். அதன் மேலே கோட் என்றும் சொல்ல முடியாது சர்ட் என்றும் சொல்ல முடியாது அப்படி ஒரு உடை. இருவரின் கையிலும் தடிமனான இரு புத்தகங்கள். அதில் ஒன்று சேட்டன் பகத் எனத் தெரிந்தது. மற்றொன்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் இருவரும் அந்தப் புத்தகத்தைப் படிப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தனர்.

காட்சி 3

சென்ட்ரலில் இருந்துக் கிளம்பும் பொழுது மணி  பதினொன்று . ஈவேரா சாலையில் இருந்து எக்மோர் செல்லும் பாலத்திற்கு திருமா யத்தனித்த அந்த கணத்தில் எங்கிருந்து வந்தனர் என்றுத் தெரியவில்லை. அதிபயங்கர வேகத்தில் லேட்டஸ்ட் பைக்களில் இளைஞர்கள். அவர்கள் வண்டி ஒட்டிய வேகமும் ,விதமும் மற்ற வண்டி ஓட்டிகளுக்கு பயத்தை உண்டு பண்ணியது. அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூடவா இவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. இப்படி அடுத்தவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி கொண்டாடுவதா புத்தாண்டு. அவர்கள் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும் என மனதிற்குள் வேண்டிக் கொண்டு மேலே விரைந்தால் கே கே நகர் வந்து சேர்வதற்குள் எப்படியும் ஒரு முப்பது பேராவது இப்படி அதிவேகத்தில் எதையும் கண்டுக் கொள்ளாமல் பறந்துக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் பல இடங்களில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இவர்களை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் .

 

இன்று அனுமத் ஜெயந்தி. அந்த அஞ்சனைப் புத்திரனின் அவதாரத் திருநாள். அனைவருக்கும் எல்லா நலமும் கிடைக்க அவனைப் பிரார்த்திப்போம். (பட உதவி : http://jaihanumanji.in)

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

 

அன்புடன் எல்கே

சோம்பேறித்தனம்

ஓகஸ்ட் 18, 2013

 

  நாம் எல்லோருமே சில சமயங்களில் சோம்பேறிகளாகத்தான் இருக்கின்றோம். இருந்தாலும் எங்கள் அபார்ட்மெண்டில் இருக்கும் இரண்டு பெண்களைப் பற்றி சொல்லியே ஆகணும். அவங்களை  நான் பார்த்தது இல்லை இதுவரை.
எங்க அபார்ட்மெண்ட்டில் மொத்தம் 5 பிரிவுகள் . நாங்கள் இருப்பது இரண்டாவது பகுதியில். எங்களுடைய பிரிவுதான் இருப்பதில் பெரியது. எங்கள் வீட்டுக்கு எதிர் வரிசையில்  அந்தக் குடும்பம் இருக்கிறது. தாய் மற்றும் இரண்டு பெண்கள். பெரியப் பெண் இப்பொழுது கல்யாணம் ஆகி சென்று விட்டாள். இரண்டாவது பெண் வேலைக்கு போகிறாள் .
நான் அந்த வீட்டில் குடியேறி மூன்று வருடங்கள் ஆகின்றது . ஒரு நாள் விடாமல் நான் காணும் காட்சி இது. நான் அங்கு குடியேறிய பொழுது இளையவள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள் . காலை ஆறு மணிக்கு கிளம்புவாள் . அவளுக்கு பையில் எல்லாம் எடுத்து வைத்து அவள் வண்டியை துடைத்து பின் வண்டியை  ஸ்டார்ட் செய்து கொடுப்பார்கள் அந்தப் பெண்ணின் அம்மா.
அதற்கு இரண்டு மணி நேரம் கழித்து மூத்தப் பெண் வேலைக்கு கிளம்புவாள் . மேலே சொன்னக் காட்சிகளில் எந்த மாற்றமும் இருக்காது. இளையவளாவது படித்துக் கொண்டிருந்தால்  என சொல்லலாம். பெரியப்  பெண் வேலைக்கு செல்பவள் , வண்டியைக் கூடவா ஸ்டார்ட் செய்து தர ஒரு ஆள் வேண்டும் ?
இளையவள் வேலைக்கு சென்றப் பின் மாறுவாள் எனப் பார்த்தேன் . ஹூஹும் நாமதான் மாறனும். அதேக் காட்சிகள் தொடருது . இது  மட்டுமல்ல,தண்ணிப் பிடிப்பது கோலம் போடுவது என எந்த வேலையும் அந்தப் பெண்கள் செய்து பார்க்கவில்லை.
எல்லா வேலையும் வேண்டாம். ஒரு சில வேலைகளிலாவது வயதான அந்தத் தாய்க்கு துணையாக இருக்கலாமே ?
எக்ஸ்ட்ரா :
images
தலைப்புக்கு சம்பந்தமில்லாதது , சங்கரா டிவியில் வரும் பஜன் சாம்ராட் ,  எனக்கு மிகப் பிடித்த ஒரு ப்ரோக்ராம். இன்று ஒரு மணிக்கு மூன்று மணி நேர பஜன் , பஜன்களில் விருப்பம் உள்ளவர் பாருங்கள். நடுவராக உடையாளூர் கல்யாணராமன் இருக்கிறார். பங்கேற்ப்போரும் அருமையாக பாடுகின்றனர்.
அன்புடன் எல்கே

சைக்கிள் புராணம்

ஓகஸ்ட் 15, 2013

பேஸ்புக்கில் ஒரு வாரமா சைக்கிள் மஹாத்மியகம்  ஓடிக்கிட்டு இருக்கு. இதை துவங்கி வைத்தது மன்னை மைனர் ஆர்விஎஸ் , அதுக்கப்புறம் இன்னும் சிலர் அங்கும், எங்கள் ப்ளாக் கேஜி  சார் பதிவிலும் எழுதியாச்சு. உருப்படியா பதிவில் எழுதி  ரொம்ப நாளாச்சு. இதையாவது எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்பா சைக்கிள் ஓட்டியதுக்  கிடையாது. சிறுவயதில் யாரோ ஒருவன் சைக்கிளில் சென்று விபத்தில் மாட்டியதில் இருந்து அப்பாவிற்கு சைக்கிள் ஆசை அகன்று விட்டது. ஏழாவது  படிக்கறப்பதான் சைக்கிள் கற்றுக் கொள்ளும் ஆசை என்னைப் பிடித்து ஆட்டியது.

எனது சைக்கிள் ஆசான் , ராமுதான். எனக்கு ஒரு  மூணு வருட சீனியர். ஒரு சுபயோக ஞாயிறன்று சைக்கிள் கற்றுக் கொள்ளும் படலம் துவங்கியது. செவ்வை நகரின் பிரதான வாடகை சைக்கிள் கடையான என் கே எஸ் (இப்பவும் இருக்கா ?) கடையில் மணிக்கு ஒரு ரூபாய் வாடகையில்  சைக்கிளும் எடுத்தாச்சு. தத்தி தத்தி ஓட்டத் துவங்கினேன். சைக்கிளை திரும்பி விட வேண்டிய சமயம்,  கொஞ்சம் மேடானப் பகுதியில் இருந்து வேகமாய் வந்து , கொஞ்சம் திருப்ப வேண்டிய இடத்தில் திருப்பாமல் விட்டு , முதல் நாளே விழுப்புண்  பெற்றேன். அதுக்கப்புறம் பலமுறை காலில் பல விழுப்புண்கள் . பெரிய பழுவேட்டரையர் மாதிரி தொண்ணூறு விழுப்புண் வாங்காதது பெரும் சாதனைதான்.

இப்படி ஒரு இரண்டு வருஷம் , வாடகை சைக்கிளில்  விடுமுறை நாட்களில் மட்டுமே ஓட்டுவது போரடிக்க, அப்பாவை நச்சரிக்கத் துவங்கினேன். என்னோட நச்சரிப்புத் தாங்காமல் அப்பொழுது என்னைப் போன்றவர்களிடம் புகழ் பெறத் துவங்கி இருந்த ஹீரோ ரேஞ்சர்ஸ் சைக்கிளை  வாங்கித் தந்தார்.
hero_ranger_cycle_for_sale_1951526
வாங்கி ரெண்டு வருஷத்தில் நான் செஞ்ச மாபெரும் சாதனை , கந்தாஷ்ரமம் இந்த சைக்கிளில் அதுவும் டபுள்ஸ் . கோடா வந்த பலியாடு என் மாமா பையன் சங்கர். போகும் பொழுது எந்தப் பிரச்சனையும் இல்லை, குன்றிளிருந்துக் கீழே இறங்கும் பொழுது , ஒரு வளைவில் ப்ரேக் கட்டாகிவிட , சாலைக்கு மறுபுறம் பள்ளத்தில் விழ இருந்தவனை அன்றுக் காப்பாத்தியது குன்றுதோறும் இருக்கும் கார்த்திகேயன்தான். .

பிறகு காலேஜில் சேர்ந்தவுடன் டிவிஎஸ் சாம்ப் வாங்கியப் பிறகு சைக்கிள் வீட்டு ஷெட்டில்  நிரந்தர வாசம் செய்யத் துவங்கியது. வண்டி எடுத்து ஓட்டி  மீண்டும் விழுப்புண் பெறத் துவங்க இப்ப வண்டி ஷெட்டுக்கு  போய்  சைக்கிள் மறுபடியும் வெளியில் வந்தது. சேலம் விட்டு வரும் வரை இருந்தது. பின் யாரோ கேட்டார்கள் எனக்  கொடுத்துவிட்டேன்  என அப்பா சொன்னார்.

அன்புடன் எல்கே

சேலம் செய்திகள்-2

ஓகஸ்ட் 10, 2013

72234234

ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை அல்லது இரண்டாவது செவ்வாய்கிழமை பூச்சாட்டல் நடைபெறும். அன்று நகரின் முக்கிய வீதிகளில் கோவில் சார்பாக பூக்கள் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ,பின் கோவிலில் அம்மனுக்கு அந்த பூவை சமர்பிப்பார். அதற்கு அடுத்த நாள், கம்பம் நடுதல். இதற்காக ஏற்கனவே  வெட்டி ,பால் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இறக்கி வைத்திருப்பர். அங்கிருந்து எடுத்து வந்து அம்மன் சந்நிதிக்கு நேராக நடப்படும். அன்றிலிருந்து பக்தர்கள் தினமும் அந்த மரத்திற்கு காலையில் தண்ணீர் ஊற்றலாம். அதாவது மரத்தை அம்மனாக உருவகித்து அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்வது போல்.

இதற்கு அடுத்த திங்களில் இருந்து அம்மன் பவனி துவங்கும். தினமும் இரவு புறப்படும் பவனிக்காக மாலையில் இருந்தே அம்மனுக்கும், அந்த ஊர்திக்கும் அலங்காரம் துவங்கும். தினமும் ஓவ்வொரு வடிவில் அலங்காரம் நடக்கும். சில சமயம் முப்பெருந்தேவியாகக் கூட அலங்காரம் செய்து பெரிய ஊர்தியில் எடுத்து வருவர். அம்மனின் வாகனத்திற்கு முன்பு பெரும்பாலும் தவில் நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பு இருக்கும். சில நாட்களில், கரகாட்டமும் நடைபெறும்.

அம்மன் பவனி ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் கச்சேரியும், சில சமயம் சொற்பொழிவுகளும் நடைபெறும். தமிழகத்தின் புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இங்கு வந்து பக்தி பாடல்களை பாடியுள்ளனர். சமீப காலமாக சினிமா பாடல்களுக்கே முக்கியத்துவமும்,வரவேற்பும் அதிகமாக உள்ளது வருந்த வேண்டிய ஒரு விஷயம். மறைந்த திரு காளிமுத்து அவர்கள் குகையில் நடைபெறும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில்  வருடந்தோறும் தவறாமல் வந்து கலந்துக் கொண்டவர்.

வீதி உலா துவங்கிய வாரத்திற்கு மறுவாரம் செவ்வாய் கிழமை காலை, அலகு குத்தி வருவார்கள். சாதரணமான வேல் அலகில் இருந்து காவடி அலகு, வண்டியில் தொங்கியப் படி அலகு குத்தி வருவது போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அலகு குத்திவருவார்கள். மாலையில் பூஞ்சட்டி ஏந்தி வருவார்கள்.

இதன் பின் சக்தி அழைப்பு நடைபெறும். அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வருவார்கள். ஒரு குதிரையில் மஞ்சள் மூட்டை வைத்து அழைத்து வருவார்கள். சக்தி அழைப்பு கடந்து சென்றவுடன் அந்த வீதியில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது ஒரு வித்யாசமான நிகழ்வு என்று எண்ணுகிறேன். இது போல் வேறு எங்கும் உள்ளதா என்றுத் தெரியவில்லை. அதாவது, தங்கள் வேண்டியக் காரியம் நிறைவேறி இருந்தால், தெருவில் சூறைக் காய் உடைப்பார்கள். யாரவது ஒரு பத்து பேர் அப்படி செய்வார்கள் என்று எண்ணாதீர்கள். அந்த வீதி முழுவதுமே தேங்காய் ஓடுகளாய் நிறைந்திருக்கும்.

சக்தி அழைப்பு முடிந்தவுடன், அடுத்து கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும். கோவிலின் வெளி ப்ரகார மார்பிள் தரையில் தான் இது நடைபெறும். சக்தி அழைப்பு முடிந்து பூஜைகள் முடிய நள்ளிரவை தொட்டுவிடும். பின்புதான் அங்கப் பிரதக்ஷணம். இதற்காக, ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். சில சமயம் இந்த வரிசை, கடைத்தெருவை தொட்டுவிடும். விடிய விடிய அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும்.

காலை ஆறுமணி அளவில் பொங்கல் வைப்பவர்கள் அதற்கான வேலைகளை துவங்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து படைப்பவர்கள் ஒருபுறம் இருக்க, வீட்டில் மாவிளக்கு மாவு போட்டு கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைப்பவர்கள் மறுபுறம். அன்று அம்மன் பல வித ஆபரணங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பாள். இங்கு உயிர் பலி கிடையாது.

இதற்கு அடுத்த நாள் ஊஞ்சல் உற்சவம். வெள்ளிகிழமை அம்மன் தேரோட்டம் நடைபெறும். வெள்ளிக் கிழமை அதிகாலையிலேயே அம்மன் விக்ரகம் தேருக்கு எடுத்து செல்லப்படும். பின் ஒன்பது மணியளவில், முதலில், லீபஜார் தொழிலாளர்கள் வடம் பிடித்து இழுக்க அம்மன்  செவ்வாய்ப்பேட்டைமக்களுக்கு தரிசனம் அளிப்பாள். முக்கிய பெரிய வீதிகளான பாத்திரக்கடை வீதி, பின் சின்ன எழுத்துக்கார தெரு வழியாக சென்று அங்கிருந்து சந்தைபேட்டை ரோடு வழியாக முக்கோணம் பகுதி சென்று கடைவீதி வழியாக தேர் நிலைக்கு வர நடுப் பகல் ஆகிவிடும். அன்று மாலை வரை அம்மன் தேரில் இருந்தே மக்களுக்கு காட்சி அளிப்பாள். இப்பொழுது இங்கு இருப்பது சமீபத்தில் செய்யப்பட புதியத் தேர். பழையத் தேர் சில வருடங்களுக்கு முன் எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதோடு பண்டிகையின் முக்கியப் பகுதிகள் முடிவடைந்துவிடும் . திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி இப்பொழுதெல்லாம் இந்த மாதத்தில் நடக்கிறதா எனத் தெரியவில்லை.

 

அன்புடன் எல்கே

சேலம் செய்திகள்-1

ஜூலை 31, 2013

என்னதான் வெளியூரில்(அது எந்த ஊரா இருந்தாலும் சரி) பிறந்த மண்ணின் பாசம் விடாது.

நேரம் கிடைக்கும் சமயங்களில் சேலம் பற்றிய செய்திகள் பதியலாம் என ஒரு எண்ணம்.

அரசியல்வாதிகளின்  சுயலாபத்திற்காக மாநிலங்களைப் பிரிப்பது போல், அவசரகோலத்தில் மாநகராட்சி ஆக்கப்பட்டு எந்தவிதமான  முன்னேற்றமும்  இல்லாமல் இருக்கும் நகரம் சேலம்.

கலெக்டர்  ஆபிஸ் மற்றும் மருத்துவமனை விரிவாக்கத்தில் பல  மரங்கள் அழிந்து விட்டதால், மழை இல்லாமல்  தவிக்கின்ற நிலை.

நான் கல்லூரிக்கு சென்ற பொழுது துவங்கிய கரூர் இரயில் பாதை இந்த வருடம் தயாராகி கரூர் வரை செல்ல தினசரி ட்ரெயின் உள்ளது.இதை திருச்சி வரை நீட்டித்தால் பலருக்கும் வசதியாக இருக்கும்.

மீண்டும் சில செய்திகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்

அன்புடன் எல்கே