Archive for the ‘சிறுகதை’ Category

இரவு

மார்ச் 15, 2014

மெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன்.  நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது.

இரவு 10 : 00

எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.

இரவு 10:20

கையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.

இரவு  11:00

பள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.

இரவு 11:30  

எக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
வெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.

மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன்.  அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.

மெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்….

அன்புடன் எல்கே

Advertisements

தத்து

திசெம்பர் 29, 2013

திருமணமாகிப் பன்னிரெண்டு வருடங்களில் எத்தனை ஏமாற்றங்கள், எத்தனைப் புறக்கணிப்புகள் அதன் காரணமாய் மனதில் எழுந்த வலிகள். உறவினர்களிடம் இருந்து வந்த குத்தல் பேச்சுகள் , சாடை மாடையாய் பேசிய கிண்டல்கள் இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து இன்று ரஞ்சனியின் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் அணையில் இருந்து விடுபட்ட ஆற்று வெள்ளமாய் அவை உடைபடும் அபாயமும் இருந்தது.

கண்களில் கண்ணீர் மெல்ல தவழ்ந்து சிறு நீரோடையைப் போல்  கன்னத்தில் இறங்க படுத்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கிப் பறந்தது.

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல உண்டு. அப்படிப்பட்ட ஒரு ஊரை சேர்ந்தவள்தான் ரஞ்சனி.கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொண்டாள் ரஞ்சனி.இருவருக்கும் பத்து வயது வித்தியாசம், இருந்தும் அவள் விரும்பியே அந்தத் திருமணத்தை செய்துக் கொண்டாள். திருமணம் முடிந்த முதல் வருடம் எப்பொழுதும் மணம் நிறைந்த பூக்கள் பூத்திருக்கும் பாதையில் நடப்பது போல். முதல் வருடம் செல்வதே தெரியாது. பின்தான் பிரச்சனைகள் ஆரம்பம். ரஞ்சனியின் வாழ்விலும் துவங்கியதுப் பிரச்சனைகள்.

வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்ந்தவளுக்கு தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்தனர் அங்கிருந்த மருத்துவர்கள். அன்றுத் துவங்கிய துன்பத் தசை வருடம் பல ஆகியும் இன்றும் அவளைப் பீடித்திருக்கிறது. நாட்கள் நகர நகர , கேள்விக் கணைகளின் எண்ணிக்கை அதிகமாகியது. கேள்விகள் எத்தனையை இருந்தாலும் ரஞ்சனியின் பதில் என்னவோ ஒரே மாதிரிதான். தேர்ந்த பந்துவீச்சாளரின் பந்தை தடுத்து ஆட இயலாத பேட்ஸ்மேனைப் போன்றதுதான் அவள் நிலை. இறைவன் ஆடிய விளையாடல்களில் அவள் வாழ்வும் ஒன்று.

ரஞ்சனியின் எண்ணக் குதிரையை கடிவாளம் போட்டு நிறுத்துவது போல் யாரோ ஒருவரின் குரல் அவளை இவ்வுலகிற்கு மீட்டு வந்தது. ரஞ்சனியை அழைத்தது அபர்ணா. ரஞ்சனி குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தாள். இறைவனின் விளையாடல்களின் வினோதத்தைப் பாருங்கள். அபர்ணாவிற்கும் குழந்தை இல்லை.

ரஞ்சனியை விட ஐந்து வருடங்கள் சிறியவள் அபர்ணா. அவளுக்கும் ஏதோக் காரணங்களால் குழந்தைப் பிறக்காமல் போக, ஒரேப் பிரச்சனையுடையவள் என்பதால் எளிதில் தோழிகளாகி விட்டனர். மதியம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்றும் அதற்குதான் வருகிறாள் என எண்ணி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டுக் கதவைத் திறந்தாள். வழக்கமாய் கொஞ்சம் டல்லடிக்கொண்டு வரும் அபர்ணா , பிரகாசமான முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

“உள்ள வாங்க “

“இல்ல வெளில கிளம்பிக்கிட்டு இருக்கோம். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம் . ரொம்ப நாளா அவர் சொல்லிட்டிருந்த மாதிரி இன்னிக்கு அந்த ஆஸ்ரமத்துக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம் ”

“என்ன திடீர்னு ?”

“இல்லை அவரும் அத்தையும் ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தேன். ஆனால் இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு தோணுச்சி அதான்…”

“நல்ல விஷயம் அபர்ணா. போயிட்டு வந்து விலாவரியா சொல்லுங்க “

அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு அபர்ணா சென்ற பின்னும் அங்கேயே நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து தன் அறையில் வந்துப் படுத்தவளின் மனதில் முந்தைய நாள் உரையாடல் மனதில் வந்துப் போனது .

எவ்வளவு நாள்தான் தன் மனதுக்குள்ளே வைத்துப் புழுங்குவது என தன் கணவன் ராகவனிடம் கேட்டு விட்டாள்.

ஏங்க எவ்ளோ நாள் நாம இப்படியே இருக்கறது. நாமளும் அந்த மருந்து இந்த மருந்து நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி எல்லாம் பண்ணிட்டோம். இருந்தும் எதுவும் சரியா வரலியே ..

“ம் ம் அதுக்கு ??”

“நான் சொல்ல வரத்து புரியலையா  இல்லை வழக்கம் போல புரியாத மாதிரி நடிக்கறீங்களா ?”

“இல்லமா . நீ என்ன சொல்ல வரேன்னு முழுசா சொல்லு “

“நாம ஒரு குழந்தைய தத்தெடுத்தா என்ன ?”

“ம்ம். தத்தெடுக்கலாம் . ஆனா….”

“உங்களுக்கு விருப்பம் இருக்கா ?”

“எனக்கு மட்டும் நமக்கு ஒருக் குழந்தை வேணும்னு ஆசை இருக்காதா ?”

“அப்புறம் ஏன் இழுக்கறீங்க  ?”

“இல்ல அம்மா ஒத்துப்பாங்களா ? அதான் தெரியலை . அதுமட்டுமில்ல மத்த சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. ஊர் பேர் தெரியாதக் குழந்தையை தத்தெடுத்துக் கிட்டா ஏதாவது பேசுவாங்க . அதுவும் யோசனையாத்தான் இருக்கு “

“அம்மா இதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கும் ஒரு பேரனோ பேத்தியோ வேணும்னு ஆசை இருக்காதா . அதுவுமில்லாமல் அவங்க அப்பவே படிச்சு வேலைக்குப் போனவங்க. அதனால் இப்படிலாம் யோசிக்க மாட்டாங்கா “

“உனக்கு இவ்ளோ நம்பிக்கை இருக்குன்னா நாம நாளைக்கு சாயங்காலம் இதைப் பத்தி அம்மாகிட்ட பேசலாம் . எனக்கு என்னமோ கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு “ எனப் பயந்தத் தன் கணவனின்  தோளில் சாய்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.

தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கணவனின் வருகைக்காகவும், தன் வாழ்க்கையில் வீசப் போகும் தென்றலுக்காகவும் காத்திருந்தாள்.

ராகவன் வீடு வந்து சேரும் வரை நிலைக் கொள்ளாமல் இருந்த அவள் , அவன் வந்தவுடன் எப்பொழுது அவன் பேச்சைத் துவங்குவான் என்றே எதிர்பார்த்திருந்தாள்.

ரஞ்சனி போட்டக் காப்பியைக் குடித்து விட்டு , ஹாலில் வந்து அமர்ந்தவன் தன் அம்மாவிடம் பேசத் துவங்கினான்.

“அம்மா , நானும் ரஞ்சனியும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் “

“என்னடா ?”  முகத்திலும் கேள்விக் கணையுடன், ஹாலில் நின்றுக் கொண்டிருந்த ரஞ்சனியைப் பார்த்தவாறு கேட்டாள்.

“எத்தனையோ டாக்டரைப் பார்த்தாச்சு. எவ்ளவோ மருந்தும் சாப்ட்டாச்சு ,ஆனா எதுக்கும் பலனில்லை. அதனால …”

“அதனால ?

“ஒருக் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு இருக்கோம் “

“இப்ப எதுக்கு தத்து எடுக்கணும் “

“என்னமா பேசற நீ . எங்களுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆச்சு.. இதுக்கு மேலையும் எப்படி  பொறுமையா இருக்கறது? எங்களுக்கும் ஆசையா இருக்காதா ? குழந்தை வேணும்னு.?”

“ஆசை இருந்து என்ன பண்ண ? விதி இல்லையேடா “

“விதி என்னாமா பண்ணும் ? நாமளா பண்றதுதான் எல்லாம் “

“இங்கப் பாரு. எனக்கு இதுல இஷ்டம் இல்லை. நீங்க வேணும்னா மாடர்னா மார் என்ன வேணா பண்ணிக்கலாம். ஆனால் நான் இன்னும் அந்தக் காலம்தான். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது “

இறுதியாய் உறுதியாய் சொன்னவள் ஹாலில் இருந்து தன் அறைக்கு சென்று விட்டவள்.

அவள் எழுந்து சென்றவுடன் என்ன செய்வது எனப் புரியாமல் பிரமைப் பிடித்தவனாய் ராகவன் உக்காந்திருக்க ,

“ஏங்க இப்ப என்ன பண்றது “

“இதுக்கு மேல அந்தப் பேச்சை எடுக்காத . நான் நேத்தே சொன்னேன் இது சரிப்படாது அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு , நீ கேட்டியா . இப்பப் பாரு அவங்க என் மேல கோச்சிக்கிட்டு போறாங்க . நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்”

அவனும் அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்றுவிட , கண்ணில் ததும்பிய கண்ணீருடன் மனம் கனத்தது அவளுக்கு. அந்த சோகத்திலும் இறைவனின் விந்தையை நினைத்து வியந்தாள். நேற்று வரை தத்தெடுக்க மாட்டேன் என்றவள் இன்று தத்தெடுக்க சென்றிருக்கிறாள். எப்படியோ ஒருக் குழந்தை இந்த வீட்டிற்கு வந்தாள் எனப் போதும் என நினைத்த எனக்கோ இப்படி…..

 -அன்புடன் எல்கே