Archive for the ‘திவ்யா’ Category

அமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …

பிப்ரவரி 22, 2014

திவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

திறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சி துவங்கியவுடனேயே ஒரு ஆச்சர்யமளித்த சம்பவம் . பொதுவாய் பள்ளி நிகழ்வுகளில் டீச்சர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினான். வரவேற்புரை யு.கே.ஜி படிக்கும் ஒரு சிறுமி. சிறுவர்களின் குரலில் தொகுத்து வழங்கியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக , சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை வந்திருந்தார். சுருக்கமாக பேசினாலும் அவர் பேசியது இன்றையத் தலைமுறை பெற்றோர்களுக்கு அவசியம் என்றேத் தோன்றியது. அவர் சொன்னதின் சுருக்கம் ,

“இன்றையக் குழந்தைகளுக்கு அறிவியல் முன்னேற்றத்தினால், அனைத்தும் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அன்பும் அரவணைப்பும். ஆதலால், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதே போல் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள் என்றார்.”

இதன்பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நிகழ்ச்சியாய் விநாயகரின் மேல் பாடல் ஒன்று. குழந்திகள் விநாயகர் போல் வேடமிட்டிருக்க, நாடிய நிகழ்வாய் அமைந்தது அது. தொடர்ந்து ரைம்ஸ், குஜராத்தி ,மராத்திப் பாடலுக்கு நடனம் என்று கலக்கினர் குழந்தைகள். அதுவும் குஜராத்தி பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளனர்.

அதன் பின் எல்கேஜி,யு கே ஜி குழந்தைகளின் பஜன். இதில்தான் திவ்யாவும் பாடினாள். ஆறு அருமையான சிறிய பாடல்கள். நேற்று எதுவும் ரெக்கார்ட் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமே சி டி தருவதாக சொல்லி இருந்தனர். அவள் தனியாக பாடியது அலைபேசியில் உள்ளது. அதை நாளை வலையேற்றம் செய்கிறேன்.

மேலும் நாம் எழுந்து ரெக்கார்ட் செய்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையும் . எனவே அமைதியாக உட்கார்ந்து பார்ப்பதை மட்டுமே செய்தேன். அதன் பின் சிறு சிறு கதைகளை நாடகமாக நடித்தனர்.  மழலை மாறா குரலில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆனந்தமாய் இருந்தது.

இறுதியில் நன்றியும் , வரவேற்புரை நிகழ்த்திய அதே சிறிய வாண்டு செய்ய நிகழ்வு இனிதாய் முடிந்தது. இதுவரைக்கும் வாண்டுகளைப் பற்றி. ஆனால் நேற்று நிகழ்வில் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தவர்கள் அந்த வாண்டுகளின் பெற்றோரே.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகளே ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும் எல்லா நிகழ்வுகளையும் முடிந்த பின் குழந்தைகளை அழைத்துக் கொள்ள சொன்னார். ஆனால் இரண்டையுமே பெற்றோர்கள் கேட்கவில்லை. ஒப்பனை அறைக்கு செல்வதும் பின் அரங்கிற்கு வருவதுமாய் ஒழுங்கீனத்தின் மொத்த உருவாய் இருந்தனர். 

அதே போல் போட்டோ எடுக்க வேண்டாம் . தனியாக சி டி மற்றும் போட்டோ தருகிறோம் என்று சொல்லி இருந்தனர். கேட்டனரா பெற்றோர்கள். தங்களிடம் இருந்த அனைத்து கருவிகள் மூலமும் போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போல், அவரவர் வீட்டுக் குழந்தைகள் மேடையில் வந்தால் மட்டுமே கை தட்டுவோம் என்று முடிவெடுத்தவர்களாய் ஜடம் போல் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் எந்தவித போட்டி உணர்வும் இல்லாமல் அழகாய் நிகழ்ச்சிகள் பண்ண , இவர்களே அவர்கள் மனதில் நச்சை ஊட்டிவிடுவார்கள் போல இருந்தது.

அதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.

திருந்துங்கள் பெற்றோர்களே !!!!

-அன்புடன் எல்கே

Advertisements

தேன் – திவ்யா சொன்னக் கதை

பிப்ரவரி 18, 2014

ஒரு பட்டாம்பூச்சி பறந்துட்டு இருந்தது. அப்ப ஒரு காக்கா வந்துச்சாம். காக்கா , பட்டாம்பூச்சிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டுச்சாம். அதுக்கு பட்டாம்பூச்சி “எனக்கு தேன் வேணும்னு கேட்டுச்சாம் “

. உடனே காக்கா என் கிட்ட தேன் இல்லை. நீ இன்னும் கொஞ்சம் தூரம் போனா நாய் இருக்கும். அதுகிட்ட கேளுன்னு சொல்லிட்டு பறந்து போச்சாம்.

அதே மாதிரி நாய்கிட்ட போய் கேட்டுச்சாம். அதுக்கு நாய் , என்கிட்ட தேன்லாம் இல்லை. மேகத்துகிட்ட கேளுன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்.

அதே மாதிரி பட்டாம்பூச்சி மேகத்துகிட்ட கேட்டதாம். உடனே மேகம் மழைய தந்து, இப்ப பூ பூக்கும் அதுக்கிட்ட கேளுன்னு சொன்னதாம்.

அதே மாதிரி மழை வந்து பூ பூத்ததாம். அப்புறம் பட்டாம்பூச்சி பூ கிட்ட தேன் குடிச்சிட்டு பறந்து போயிடுச்சாம்

திவ்யாவின் பக்கங்கள்

செப்ரெம்பர் 12, 2012

முன்பு அடிக்கடி திவ்யாவின் பக்கங்கள் அப்டேட் பண்ணிட்டு இருந்தேன். பிறகு வழக்கம் போல் அதுவும் நின்னு போச்சு . பள்ளிகூடத்தில் சேர்ந்த பிறகு இன்னும் குறும்பு ஜாஸ்தியா போச்சு .

 

“‘சுவர்களும்
திரை சீலைகளாகும்- சிறு
கம்பியும் தூரிகையாகும்…”

 

வீட்ல இருக்கற எல்லா சுவர்களும் அவளோட உயரத்துக்கு மட்டுமில்லை.நாற்காலி   போட்டு ஏறி நின்றால் எவ்வளவு உயரம் வருமோ அந்த உயரம் வரை அவளோட சித்திரங்கள்தான். ஒரு போர்ட் வாங்கி மாட்டி  இருக்கேன் . எழுத நோட்களும் இருக்கு. அப்படியும் மேடம் சுவர்லதான் எழுதுவாங்களாம். இப்ப எல்லா இடமும் எழுதி முடிச்சாச்சு அதனால்  அமைதியா இருக்காங்க.

காலையில் மேடத்தை ஸ்கூலுக்கு கிளப்பறது பெரிய பிரச்சனையே இல்லை. ஆனால் தூங்க வைக்கறது பெரும்பாடா இருக்கு. கதை சொன்னாலும் தூங்கறது இல்லை. காலையில் நாம் எந்த டைமுக்கு  கூப்பிட்டாலும் உடனே எழுந்துவிடுவாள். இவளை ஒழுங்கா தூங்க வைக்க நல்ல ஐடியா கொடுங்க யாராவது.

மத்தபடி வீட்டுபாடம் (பெருசா ஒன்னும் இல்ல, கலர் பண்ண சொல்லுவாங்க ) எழுதறது படிக்கறது இதுல எல்லாம் மேடம் டாப். அதே போல் விஷமத்திலும் .

 

அவளோட அம்மாவை சமயத்தில் பேர் சொல்லி கூப்பிடுவா. என்னை அதுமாதிரி சமீப காலம் வரைக்கும் கூப்பிட்டதில்லை.இப்பவே பேசி ஜெயிக்க முடியறது இல்லை. இன்னும் வளர வளர, இப்பவே கண்ணை கட்டுது.

தி : “கார்த்தி , இங்க வா ”

நான் : “ஏன் பேரை சொல்லி கூப்பிடற ”

தி : அதுதானே உன்னோட பேரு ,

மீ :ஞே ??

 

மீண்டும் சில திவ்யாவை பற்றிய செய்திகளுடம் பிறிதொரு பதிவில் ….

 

அன்புடன் எல்கே

 

 

 

அமிர்த வித்யாலயா

ஜூலை 2, 2012

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே திவ்யாவை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற ஆராய்ச்சி தொடங்கினேன். அப்பொழுதே நானும் என் மனைவியும் சில விஷயங்களை முடிவு செய்தோம். அவற்றில் முக்கியமானது எந்தக் காரணத்தைக் கொண்டும் கிறித்துவப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்று. இரண்டு வருடம் கிருத்தவப் பள்ளியில் படித்தபொழுது அவர்கள் அங்கு செய்தக் கூத்துகள் இன்னும் நினைவில் உள்ளது. கிறித்துவ மாணவர்களையும் மற்றவர்களையும் வித்யாசமாக நடத்தியது. இந்து மதப் பழக்கவழக்கங்களை குறைக் கூறியது இன்னும் பல…..

அடுத்து வீட்டில் இருந்து அதிகத் தொலைவில் இருக்கக்கூடாது. மாணவர்களை வெறும் மதிப்பெண் எந்திரங்களாக நடத்தும் பள்ளியாக இருக்ககூடாது என்று நினைத்தோம். இந்த அடிப்படையில் மூன்றுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். மூன்றில் ஒரு பள்ளி வீட்டிற்கு மிக அருகில்.மற்றவை ரொம்ப தூரம் என்று சொல்ல இயலாத வகையில் இருந்தது. வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியை பற்றி வந்த சில தகவல்களின் காரணமாய் அதை கழற்றி விட்டேன்.

அடுத்து இன்னொரு பள்ளியில் போன வருடம் விண்ணப்பம் கொடுத்தபொழுது வயதுக் குறைவு என்று சொன்னார்கள், இந்த வருடம் வயது அதிகம் என்று சொன்னார்கள். ஆக அதையும் கழற்றி விட்டேன். மீதம் இருந்தது அமிர்த வித்யாலயா மட்டுமே.அதைப் பற்றி விசாரித்ததில் நல்லவிதமான பதில்களேக் கிடைத்தது.
 
பள்ளிக்கு விண்ணப்பம் வாங்க சென்ற சமயத்தில் அங்கு அமர்ந்து அவதானித்த பொழுது , பள்ளியின் சூழலும் பிடித்திருந்தது. எனவே மேற்கொண்டு அதிகம் விசாரணை செய்யாமல் அங்கே சேர்த்துவிட்டேன்.

.பள்ளித் திறந்த முதல் வாரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு தாமதமாய் போனதால் என் மனைவி மட்டும் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்கள் சொன்ன முதல் விஷயம் வீட்டில் குழந்தையை படி படி என்று  அதிகம் வற்புறுத்தாதீர்கள்.எல் கே ஜி / யூகேஜி யில் பாடல்கள் வடிவிலேயே பாடங்கள் வைத்திருக்கிறோம். பள்ளியில் நாங்கள் குழந்தையை எழுத சொல்ல மாட்டோம். வீட்டிலும் நீங்கள் வற்புறுத்தக் கூடாது. குழந்தையின் கை விரல்கள் எழுதுவதற்கு இந்த வயதில் தயாராகி இருக்காது. குழந்தையாக வரைகிறேன் எழுதுகிறேன் என்றால் செய்யவிடுங்கள். நீங்கள் வலியுறுத்த வேண்டாம். இந்த மாதிரி இன்று எத்தனைப் பள்ளிகளில் சொல்கிறார்கள் ?

எனக்குத் தெரிந்த இன்னொரு பள்ளியில் எல்கேஜியில் குழந்தை ஆங்கிலம் எழுத சொல்லி வற்புறுத்துகிறார்கள். அந்த வயதில் குழந்தை எப்படி எழுதும் ? அதே போன்று அவர்கள் குடுத்தது இரண்டு புத்தகங்கள். ஒரு புத்தகம் தமிழ் ,மற்றொன்று ரைம்ஸ் மற்றும் ஸ்லோகங்கள்(ஆங்கிலம்/தமிழ்/ ஹிந்தி ).

அதே போன்று நம் பண்பாட்டிற்கு இவர்கள் குடுக்கும் முக்கியத்துவமும் பிடித்திருந்தது. குட் மார்னிங் மேடம் போன்றவை பள்ளியில் கிடையாது. அதற்கு பதில் “குருப்யோ நமஹ: ” போன்றவைதான். காலையில் பள்ளி ப்ரேயரிலும் இதுபோன்றுதான். (இதெல்லாம் இங்க நெறைய பேருக்குப் பிடிக்காது என்று தெரியும் 🙂

நாம்தான் பலக் காரணங்களால் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் தர மறந்துவிட்டோம். நம் குழந்தைகளாவது அவற்றைக் கற்று வளர வேண்டும். எல்கேஜி மட்டுமல்ல , பெரிய வகுப்புகளிலும் இவர்கள் இதேபோன்றுதான் நடத்துகிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல நாடு முழுவதும் இவர்கள் பள்ளி / கல்லூரிகள் உண்டு. வேலை மாற்றம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.

சென்னையில் நெசப்பாக்கத்தில் அமைந்துள்ளது. நல்ல பள்ளிகூடத்தில் தங்கள் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இங்கு சேர்க்கலாம். பள்ளியின் இணையத் தள முகவரிhttp://www.amritavidyalayam.org/schools-and-location/

பள்ளித் துவக்கம்

ஜூன் 17, 2012
திவ்யாக்கு பள்ளித் திறந்து இரண்டு நாட்கள் ஸ்கூல் போயிட்டு வந்தாச்சு. எதுவும் ரகளை பண்ணாமல் சமத்தா போயிட்டு வந்துட்டாள்.

நேற்று , பள்ளிக்கூடம் திறந்த முதல் வாரத்திலேயே பெற்றோர் – ஆசிரியர்  மீட்டிங். முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆபீஸ்க்கு பர்மிஷன் போட்டதில் நேற்று என்னால் செல்ல இயலவில்லை. என் தங்கமணி மட்டும் போயிட்டு வந்தாங்க. பள்ளியின் செயல்பாடு எந்த மாதிரி வகுப்புகள் எடுப்போம், பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  அவற்றில் பல எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

அதில் எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான்…

கண்டிப்பா குழந்தைகளை எழுத சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க. அவங்க விரல்களில் அதற்கு உண்டான வலிமை இருக்காது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் . அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.

இப்ப பல பெற்றோரின் நினைப்பே , பள்ளிக்கூடம் போகத் துவங்கியவுடன் எல்லாம் குழந்தை உடனே செய்யனும்னு எதிர்பார்ப்பதுதான்.

எல்லாவற்றையும் விட ஒரு குழந்தையின் தாய் கேட்டதுதான் டாப் கிளாஸ்

“என் குழந்தைக்கு டென்னிஸ் கோச்சிங்  தருவீங்களா ?”

அதற்கு தலைமை ஆசிரியை அளித்த பதில்

” பொறந்ததில் இருந்து உங்க குழந்தையின் கையை பார்த்திருக்கீர்களா ? டென்னிஸ் விளையாடற வயசா இது ?  இந்த வயதில் என்ன சொல்லித் தரவேண்டுமோ அதைக் கட்டாயம் சொல்லித் தருவோம் “

இறுதியாக , ” என் மகன் சான்றோன் எனக் கேட்டத் தருணம் “.. இரண்டு நாட்கள் கவனித்ததில் அதிக வார்த்தைகளை சரியாக சொன்னக் குழந்தை திவ்யா என்று அவர்கள் கிளாஸ் டீச்சர் அனைவரின் முன் சொன்னது…

அன்புடன் எல்கே

அனைவரும் நலமா ?

ஜூன் 10, 2012
எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். சமீப காலமா அதிகம் எழுதறதும் இல்லை. ப்ளாக் பக்கம் வருவதும் இல்லை. அதனால்தான் எந்த பதிவு பக்கமும் தலை காட்டறது இல்லை.

கூகிள் ப்ளஸ்ல கொஞ்சம் காலம் இருந்தாலும், இப்ப அங்க கூட அதிகம் போறதில்லை. ஆபிஸ்ல அவ்ளோ ஆணி. புடுங்க புடுங்க வந்துகிட்டே இருக்கு.

திவ்யாகூடவும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கே . மேடம் வர வியாலன்ல இருந்து ஸ்கூல் போகப் போறாங்க. இப்பவே ரெடி ஆகிட்டாங்க . புது இடம். புதிய நண்பர்கள் . நமக்குத்தான் படபடப்பா இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல சுதந்திரமா சுத்திகிட்டு இருந்தவங்க, அங்க போய்  எப்படி இருக்க போறாங்களோன்னு. இவங்ககிட்ட மாத்திகிட்டு டீச்சர் என்ன பாடுபடப் போறாங்கன்னு தெரியலை .

சமீபத்தில் திவ்யா சொன்னக் கதை ஒன்று உங்களுக்காக….

http://soundcloud.com/karthik-lakshmi-narasimman/story-telling-by-divya

அன்புடன் எல்கே

திவ்யாவின் கதை

ஜூன் 26, 2011
திவ்யாவை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. கீழ திவ்யா சொன்ன கதையை அப்லோட் செய்த லிங்க் கொடுத்து இருக்கேன். மொபைலில் ரெகார்ட் செய்ததால் உங்கள் ஸ்பீக்கர் சவுண்ட் அதிகம் வைத்துக் கேட்கவும் . கதை அவுட்லைன் மட்டும்தான் எனக்கு புரிஞ்சது. இவ அவளோட பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வராலாம். அவ்ளோதான். உங்களுக்கு புரிஞ்சதை மத்தத சொல்லுங்க கேட்டுட்டு சொல்லுங்க 
அன்புடன் எல்கே

ராஜகுமாரி

ஜூன் 13, 2011
அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் …

“ப்பா” உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்…

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்…

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே எனக்கு வேதம் …


உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்….


பி . கு : இன்று திவ்யாவின் பிறந்தநாள் 


அன்புடன் எல்கே

பெயர்க் காரணம்

பிப்ரவரி 28, 2011
ஸ்ரீஅகிலா அவர்கள் பெயர்க்காரணம் என்றத் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அதாவது நமக்கு வெச்ச பெயரால் நாம் சந்தித்த சுவாரசியங்களையும் ,கிண்டல்களையும் சொல்ல சொல்லி. 
நான் பிறந்த பொழுது என் பாட்டி (அம்மாவின் அம்மா ) எனக்கு வைத்தப் பெயர் வெங்கட்ராமன் (என் அப்பாவின் அப்பா பெயர் ). பிறப்பு சான்றிதழிலும்  இந்தப்  பெயர்தான் இருக்கும். ஆனால் என் தாத்தாவின் பெயரை சொல்லி எப்படிக் கூப்பிடுவது ? மரியாதையாக இருக்காது அல்லவா . சரி இன்னொரு பேரு வைக்கலாம் என்று வச்சதுதான் கார்த்திக். பெரிய காரணம் ஒன்றும் இல்லை, நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. 
பள்ளியில் வருகைப் பதிவில் பெயர் நடுவில் வரும். ரொம்பப் பின்னாடியும் போகாது, முன்னாடியும் இருக்காது. கல்லூரி வரும் வரை எந்தப் பிரச்சனையும்  இல்லை . கல்லூரியில் இன்னொரு கார்த்திக் இருந்தான். சரி இனிசியல் வைத்து மாறுபடுத்திக் கொள்ளலாம் என்றால் அவனது இனிசியலும் எல் (L )  தான். அவன் வீரபாண்டி (சேலம் அருகே இருக்கும்) கிராமத்தில் இருந்து வருவான். எனவே அவன் வீரபாண்டி கார்த்திக் ஆகிட்டான். நான் எப்பவும் போல் கார்த்திக் தான் . 
வகுப்பில் லெக்சரர் என்னைக் கேள்வி கேட்டால், அவன் எழுந்து பதில் சொல்லுவான் ,அவனைக் கேட்டால் நான் எழுந்து சொல்லுவேன். பொதுவா கார்த்திக்னுதான் கூப்பிடுவாங்க,. மாத்தி எழுந்து நின்னு ஒரே காமெடியா இருக்கும். 
படிப்பு முடிஞ்சு வேலைக்கு வந்தப்புறம்தான் கார்த்திக் எல் கே வா மாறினது . இப்ப வேலை செய்யற ஆபிசில் ஏற்கனவே ஒரு கார்த்திக் இருந்ததால் நான் எல் கேவா மாறினேன் ,
என் மகளுக்கு பெயர் வைக்கும் பொழுது என் பாட்டியின் பெயர் அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . அவர்களது முழு பெயரையும் வைத்தால் ரொம்ப பழைய பெயரா இருக்கும்னு தோணியது. அதே சமயம் ரெண்டு மூணு பேர் வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. 
எங்களுடைய நெருங்கிய குடும்ப நண்பர், திவ்யா மக நட்சத்திரத்தில் பிறந்ததால் “த,தி ” சொல்லில் துவங்கும் பெயரை வைக்க பரிந்துரை செய்தார். என் பாட்டியின் பெயரில் பின்பாதியும் சேர்த்து திவ்ய லக்ஷ்மி என்று வைத்தோம். 
இதுதாங்க என்னோட பெயர் புராணம். 
இதை தொடர சிலரைக் கூப்பிடனுமே , 

அன்புடன் எல்கே

திவ்யாவும் ஸ்கூலும் II

ஜனவரி 18, 2011

முதல் மூன்று நாட்கள் பள்ளி செல்ல அடம்பிடித்த திவ்யா ,நான்காம் நாள் நான் கூடி சென்ற பொழுது அழாமல் உள்ளே சென்றுவிட்டாள். என் மனைவிக்கு ஆச்சர்யம். நான் ஒன்னும் பெருசா எதுவும் செய்யவில்லை. அங்கே மீன்தொட்டி இருந்தது. அதில் இருந்த மீனை காட்டி சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்படியே வகுப்பறையில் விட்டுவிட்டேன்.

************************************************************************************
அன்று மாலை ,நான் வீடு திரும்பியப் பின் “இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ண?”
“விளையாடினேன் “
“ரைம்ஸ் சொல்லித் தந்தாங்களா ??”
“இல்லை “
“அப்புறம் வேற என்ன பண்ண ?”
“நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்”
“…………..??”

என்ன சொல்ல இதுக்கு நான் ??

************************************************************************************
இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
“அம்மா டாட்டா. “
“சரி அழாம சமத்தா இரு “
“சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் “

************************************************************************************
ஒரு வாரத்திலேயே அந்த சூழலுக்கு ஒத்துப் போய் விட்டாள். இப்பொழுது பள்ளி செல்ல அடம்பிடிப்பது இல்லை. இன்னும் மற்ற குழந்தைகளுடன் அதிகம் பழக ஆரம்பிக்கவில்லை. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்

அன்புடன் எல்கே