Posts Tagged ‘அமிர்த வித்யாலயா’

அமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …

பிப்ரவரி 22, 2014

திவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

திறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சி துவங்கியவுடனேயே ஒரு ஆச்சர்யமளித்த சம்பவம் . பொதுவாய் பள்ளி நிகழ்வுகளில் டீச்சர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினான். வரவேற்புரை யு.கே.ஜி படிக்கும் ஒரு சிறுமி. சிறுவர்களின் குரலில் தொகுத்து வழங்கியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக , சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை வந்திருந்தார். சுருக்கமாக பேசினாலும் அவர் பேசியது இன்றையத் தலைமுறை பெற்றோர்களுக்கு அவசியம் என்றேத் தோன்றியது. அவர் சொன்னதின் சுருக்கம் ,

“இன்றையக் குழந்தைகளுக்கு அறிவியல் முன்னேற்றத்தினால், அனைத்தும் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அன்பும் அரவணைப்பும். ஆதலால், உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதே போல் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்களுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள் என்றார்.”

இதன்பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நிகழ்ச்சியாய் விநாயகரின் மேல் பாடல் ஒன்று. குழந்திகள் விநாயகர் போல் வேடமிட்டிருக்க, நாடிய நிகழ்வாய் அமைந்தது அது. தொடர்ந்து ரைம்ஸ், குஜராத்தி ,மராத்திப் பாடலுக்கு நடனம் என்று கலக்கினர் குழந்தைகள். அதுவும் குஜராத்தி பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் இன்னும் என் நினைவில் உள்ளனர்.

அதன் பின் எல்கேஜி,யு கே ஜி குழந்தைகளின் பஜன். இதில்தான் திவ்யாவும் பாடினாள். ஆறு அருமையான சிறிய பாடல்கள். நேற்று எதுவும் ரெக்கார்ட் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமே சி டி தருவதாக சொல்லி இருந்தனர். அவள் தனியாக பாடியது அலைபேசியில் உள்ளது. அதை நாளை வலையேற்றம் செய்கிறேன்.

மேலும் நாம் எழுந்து ரெக்கார்ட் செய்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையும் . எனவே அமைதியாக உட்கார்ந்து பார்ப்பதை மட்டுமே செய்தேன். அதன் பின் சிறு சிறு கதைகளை நாடகமாக நடித்தனர்.  மழலை மாறா குரலில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆனந்தமாய் இருந்தது.

இறுதியில் நன்றியும் , வரவேற்புரை நிகழ்த்திய அதே சிறிய வாண்டு செய்ய நிகழ்வு இனிதாய் முடிந்தது. இதுவரைக்கும் வாண்டுகளைப் பற்றி. ஆனால் நேற்று நிகழ்வில் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தவர்கள் அந்த வாண்டுகளின் பெற்றோரே.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகளே ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும் எல்லா நிகழ்வுகளையும் முடிந்த பின் குழந்தைகளை அழைத்துக் கொள்ள சொன்னார். ஆனால் இரண்டையுமே பெற்றோர்கள் கேட்கவில்லை. ஒப்பனை அறைக்கு செல்வதும் பின் அரங்கிற்கு வருவதுமாய் ஒழுங்கீனத்தின் மொத்த உருவாய் இருந்தனர். 

அதே போல் போட்டோ எடுக்க வேண்டாம் . தனியாக சி டி மற்றும் போட்டோ தருகிறோம் என்று சொல்லி இருந்தனர். கேட்டனரா பெற்றோர்கள். தங்களிடம் இருந்த அனைத்து கருவிகள் மூலமும் போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போல், அவரவர் வீட்டுக் குழந்தைகள் மேடையில் வந்தால் மட்டுமே கை தட்டுவோம் என்று முடிவெடுத்தவர்களாய் ஜடம் போல் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் எந்தவித போட்டி உணர்வும் இல்லாமல் அழகாய் நிகழ்ச்சிகள் பண்ண , இவர்களே அவர்கள் மனதில் நச்சை ஊட்டிவிடுவார்கள் போல இருந்தது.

அதே போல் இறுதியில் நன்றியுரை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதி பேர் எழுந்துக் கிளம்பத் துவங்க, இறுதியில் மாணவர்கள் சொன்ன சாந்தி மந்திரங்களையும், பாடிய தேசிய கீதத்தையும் கேட்க வெகு சிலரே இருந்தனர்.

திருந்துங்கள் பெற்றோர்களே !!!!

-அன்புடன் எல்கே

Advertisements

அமிர்த வித்யாலயா

ஜூலை 2, 2012

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே திவ்யாவை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற ஆராய்ச்சி தொடங்கினேன். அப்பொழுதே நானும் என் மனைவியும் சில விஷயங்களை முடிவு செய்தோம். அவற்றில் முக்கியமானது எந்தக் காரணத்தைக் கொண்டும் கிறித்துவப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்று. இரண்டு வருடம் கிருத்தவப் பள்ளியில் படித்தபொழுது அவர்கள் அங்கு செய்தக் கூத்துகள் இன்னும் நினைவில் உள்ளது. கிறித்துவ மாணவர்களையும் மற்றவர்களையும் வித்யாசமாக நடத்தியது. இந்து மதப் பழக்கவழக்கங்களை குறைக் கூறியது இன்னும் பல…..

அடுத்து வீட்டில் இருந்து அதிகத் தொலைவில் இருக்கக்கூடாது. மாணவர்களை வெறும் மதிப்பெண் எந்திரங்களாக நடத்தும் பள்ளியாக இருக்ககூடாது என்று நினைத்தோம். இந்த அடிப்படையில் மூன்றுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். மூன்றில் ஒரு பள்ளி வீட்டிற்கு மிக அருகில்.மற்றவை ரொம்ப தூரம் என்று சொல்ல இயலாத வகையில் இருந்தது. வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியை பற்றி வந்த சில தகவல்களின் காரணமாய் அதை கழற்றி விட்டேன்.

அடுத்து இன்னொரு பள்ளியில் போன வருடம் விண்ணப்பம் கொடுத்தபொழுது வயதுக் குறைவு என்று சொன்னார்கள், இந்த வருடம் வயது அதிகம் என்று சொன்னார்கள். ஆக அதையும் கழற்றி விட்டேன். மீதம் இருந்தது அமிர்த வித்யாலயா மட்டுமே.அதைப் பற்றி விசாரித்ததில் நல்லவிதமான பதில்களேக் கிடைத்தது.
 
பள்ளிக்கு விண்ணப்பம் வாங்க சென்ற சமயத்தில் அங்கு அமர்ந்து அவதானித்த பொழுது , பள்ளியின் சூழலும் பிடித்திருந்தது. எனவே மேற்கொண்டு அதிகம் விசாரணை செய்யாமல் அங்கே சேர்த்துவிட்டேன்.

.பள்ளித் திறந்த முதல் வாரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு தாமதமாய் போனதால் என் மனைவி மட்டும் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்கள் சொன்ன முதல் விஷயம் வீட்டில் குழந்தையை படி படி என்று  அதிகம் வற்புறுத்தாதீர்கள்.எல் கே ஜி / யூகேஜி யில் பாடல்கள் வடிவிலேயே பாடங்கள் வைத்திருக்கிறோம். பள்ளியில் நாங்கள் குழந்தையை எழுத சொல்ல மாட்டோம். வீட்டிலும் நீங்கள் வற்புறுத்தக் கூடாது. குழந்தையின் கை விரல்கள் எழுதுவதற்கு இந்த வயதில் தயாராகி இருக்காது. குழந்தையாக வரைகிறேன் எழுதுகிறேன் என்றால் செய்யவிடுங்கள். நீங்கள் வலியுறுத்த வேண்டாம். இந்த மாதிரி இன்று எத்தனைப் பள்ளிகளில் சொல்கிறார்கள் ?

எனக்குத் தெரிந்த இன்னொரு பள்ளியில் எல்கேஜியில் குழந்தை ஆங்கிலம் எழுத சொல்லி வற்புறுத்துகிறார்கள். அந்த வயதில் குழந்தை எப்படி எழுதும் ? அதே போன்று அவர்கள் குடுத்தது இரண்டு புத்தகங்கள். ஒரு புத்தகம் தமிழ் ,மற்றொன்று ரைம்ஸ் மற்றும் ஸ்லோகங்கள்(ஆங்கிலம்/தமிழ்/ ஹிந்தி ).

அதே போன்று நம் பண்பாட்டிற்கு இவர்கள் குடுக்கும் முக்கியத்துவமும் பிடித்திருந்தது. குட் மார்னிங் மேடம் போன்றவை பள்ளியில் கிடையாது. அதற்கு பதில் “குருப்யோ நமஹ: ” போன்றவைதான். காலையில் பள்ளி ப்ரேயரிலும் இதுபோன்றுதான். (இதெல்லாம் இங்க நெறைய பேருக்குப் பிடிக்காது என்று தெரியும் 🙂

நாம்தான் பலக் காரணங்களால் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் தர மறந்துவிட்டோம். நம் குழந்தைகளாவது அவற்றைக் கற்று வளர வேண்டும். எல்கேஜி மட்டுமல்ல , பெரிய வகுப்புகளிலும் இவர்கள் இதேபோன்றுதான் நடத்துகிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல நாடு முழுவதும் இவர்கள் பள்ளி / கல்லூரிகள் உண்டு. வேலை மாற்றம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.

சென்னையில் நெசப்பாக்கத்தில் அமைந்துள்ளது. நல்ல பள்ளிகூடத்தில் தங்கள் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இங்கு சேர்க்கலாம். பள்ளியின் இணையத் தள முகவரிhttp://www.amritavidyalayam.org/schools-and-location/