Posts Tagged ‘காஞ்சி’

நகரேஷு காஞ்சி

மே 1, 2014

நகரங்களில் சிறந்தது என்று வர்ணிக்கப்பட்ட காஞ்சிக்கு இன்று அதிகாலை பிரயாணித்தேன். கோட்டைக்குள் நுழைந்து தடுமாறிய பரஞ்சோதி போல் தடுமாறாமல், வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக நேராய் சென்று நின்ற இடம், இவ்வுலகை தன்னருளால் ஆளும் அன்னையாகிய காமாக்ஷி உறையும் காமாட்சியம்மன் திருக்கோவில். மிதமான கூட்டமே அந்தக் காலை நேரத்தில் இருந்ததால் அதிக நேரம் காத்திருக்காமல் வெகு விரைவிலேயே அம்மனை தரிசிக்க முடிந்தது.  காமாட்சியை தரிசித்து விட்டு வருவது என்ன அவ்வளவு எளிதா…

அருள்  பொங்கும் அம்முகத்தில் இருந்து நம் கண்களை அகற்ற இயலுமா என்ன.. எப்பொழுது காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சந்நிதிக்கு நேரெதிரில் உள்ள மண்டபத்தில் நின்றால் திவ்ய தரிசனம் உறுதி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் தரிசனத்தை முழுதும் காண கண் கோடி வேண்டும் .

அன்னையை காண வரிசையில் நின்ற பொழுது, சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பினால் பூசப்பட்டிருந்த அவல நிலை, கீழே போட்டோவில் Kamatchiamman_T1

கைலாயநாதர் கோவில்

சென்ற முறைப் பயணத்தில் இந்தக் கோவிலுக்கு போகாமல் விட்டதால் , அடுத்து நேரே அங்கேதான். மிக மிக அற்புதமான கோவில். நம் முன்னோர்களில் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இக்கோவில். காலத்தால் தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று சொல்கிறார்கள். (தகவல் உபயம் விக்கி பீடியா ).  ராஜசிம்ம பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ஆனால் நம் காலத்தில் இது காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது. ஆறுகால பூஜை கிடையாது. ஒரே கால பூஜை அதுவும் எந்த நேரம் என்ற அறிவிப்பு இல்லை. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 

தஞ்சையும் நம் கலையின் உச்சமே இல்லை என சொல்லவில்லை. தஞ்சையை தவிர்த்த பலக் கலைத் தன்மை வாய்ந்தக் கோவில்கள் உள்ளன. அவற்றையும் போற்றுவோம் அவற்றையும் காப்போம்.

IMG_20140501_081318 IMG_20140501_082855

இதன் பின்,வழக்கமாய் செல்லும் வரதராஜரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்து கூடுதலாய் நேரம் இருந்ததால் குமரக் கூட முருகனையும் தரிசித்தேன். இறுதியில் கச்சியம்பதியான ஏகாம்பரேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு சங்கர மடம் சென்றேன்.

மஹா பெரியவா பிருந்தாவனத்தில் இன்று வழக்கத்தை விட கூடம் அதிகம். சிறிது நேர த்யானதிற்குப் பிறகு , பிருந்தாவனத்தை வலம் வந்துக் கிளம்பி விட்டேன். அப்பொழுதுதான் ஹெல்மெட்டை மறந்த நியாபகம் வந்தது. மீண்டும் அதை எடுக்க மண்டபத்திற்கு வந்தபொழுது, வழக்கமாய் செய்யும் நமஸ்காரத்தை மறந்ததும் நினைவிற்கு வர, குருநாதனை நமஸ்கரித்து சென்னை நோக்கி கிளம்பினேன்..

அன்புடன் எல்கே

Advertisements

காஞ்சி – II

ஜூன் 29, 2010

நாங்கள் கிளம்பும் சமயம் ஒரு முதியவர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு ஒரு அறுபது வயதை தாண்டியவர் போல் தென்பட்டார். நெற்றி நிறைய திருநீறும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து பார்பவர்கள் வணங்கும் வண்ணம் இருந்தார்.

நான் அருகில் சென்றவுடன், என் குழந்தையை அழைத்து வரசொன்னார். திவ்யா வந்தவுடன் அவள் கையில், ஸ்ரீலட்சுமி உருவமும் தாமரையும் பொறித்த ஒரு சிறு தங்கக் காசை கொடுத்து ஆசிர்வதித்தார். எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை (எங்களுக்கும்தான்)  அளித்தது.

ஒரு வழியாக  சென்னைக்கு கிளம்ப பேருந்து நிலையம் வந்தோம்.அப்ப மணி இரண்டை தாண்டி விட்டது. எனவே எல்லோரும் பழச்சாறு குடித்துவிட்டு , சென்னை சென்று உணவருந்த முடிவு செய்தோம். சென்னையும் வந்து சேர்ந்தோம்.எப்பொழுதும் காஞ்சி சென்று திரும்பும்பொழுது மிகக் கடினமாக இருக்கும். பேருந்து கிடைப்பதில் தாமதம்
ஆகும். அன்று எல்லாம் நல்லபடியாக ஆனதே என்று நினைத்தோம்.

 ஒரு நான்கரை மணி அளவில். கோயம்பேட்டில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து நூறடி ரோட்டில் SRM university அருகே இறங்கவும், கனமழை துவங்கவும் சரியாக இருந்தது.வீட்டருகே வந்தும், வீட்டிற்க்கு செல்ல இயலாமல் மாட்டிக் கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், அங்கிருந்த பள்ளி ஒன்றில் நின்று கொண்டிருந்தோம் . இதில் வேறு, அந்த பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் தீடிர் என்று மத்தாப்பு மழை பொழிந்தது. ஒரு பயத்துடனே அங்கு நின்று கொண்டிருந்தோம்.

ஆறு மணி அளவில் மழை நின்றவுடன் ,முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து வீடு திரும்பினோம். மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் விரைவில் சந்திக்கிறேன்

 With Love LK

காஞ்சி

ஜூன் 28, 2010

கடந்த  வெள்ளியன்று   எனது பெற்றோர் மற்றும் எனது தந்தையுடன் எங்கள் கடையில் இருப்பவர் குடும்பத்துடன்  சென்னை வந்திருந்தனர். எனது தந்தை அம்பத்தூரில் இருக்கும் ஒரு ஹோமியோ மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதால் மாதம் ஒரு முறை வருவார். இந்த முறை வெள்ளி சனியாக அமைந்ததால், சனியன்று காஞ்சி செல்லலாம் என்று வெள்ளி இரவு முடிவு செய்தோம். சனி இரவே அவர்கள் சேலம் திரும்ப வேண்டி இருந்தது. எனவே மதியம் காஞ்சியில் இருந்து திரும்பினால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து சனி காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.

முதலில் காமாட்சி அம்மனையும் பின் ஈஸ்வரனை தரிசித்து நேரம் இருப்பின் மற்ற கோவில்களுக்கு செல்லலாம் என்பது பிளான்.  சென்னையில் இருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூரை தாண்டும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீபெரும்புதூரை கடந்தப்பின் வழியில் ஒரு விபத்து. லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனால் முக்கால் மணி நேரம் தாமதமாக காஞ்சி சென்றடைந்தோம்.

அப்பொழுதே ஒன்பது மணி ஆகிவிட்டது. எனவே காலை உணவை முடிப்போம் என்று ஒரு ஓட்டலில் நுழைந்தோம். ஏன்டா போனோம்னு ஆகிடுச்சி. அவங்க கொடுத்த வடைய வச்சி ஒரு போராட்டத்தை கலைக்கலாம். அவ்வளவு அருமை . நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம். எதோ சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு கிளம்பினோம். அந்த ஓட்டல்ல உருப்படியான ஒரு விஷயம் பெண்களுக்கு கொடுத்து இருந்த இட ஒதுக்கீடு. கல்லா பெட்டி தவிர மற்ற இடங்கள் முழுக்க பெண்கள்தான்.

ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி, முதலில் அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கு எங்களை வரவேற்க கணபதியார் காத்திருந்தார். எங்களை கண்டவுடன் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அவருக்கு இரண்டு வாழைபழங்களை குடுத்து விட்டு அங்கிருந்த அம்மன் சந்நிதி நோக்கி சென்றோம். இந்த கணபதியார் மிக குறும்புக்காரர். கோவிலுக்கு நுழைவோர் அவரை கண்டுக்கொள்ளாமல் சென்றால், தன் துதிக்கை மூலம் அவர்களை இழுத்து அவரை பார்க்க செய்துவிடுவார்.

அம்மன் சந்நிதியில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். இங்கு சிறப்பு தரிசனம் இல்லை. (இப்பொழுது இல்லை முன்பு இருந்ததாக எனக்கு நினவு இல்லை ). எனவே வரிசையில் அனைவருடன் இணைந்து மெதுவாக சென்றோம். சரியாக அம்மனை தரிசிக்கும் வேலையில் , மின்வெட்டு. அதனால், சாதாரண விளக்கு ஒளியில் அம்மன் முகம் ஜொலிக்க ஆனந்த தரிசனம். அன்று என்னவோ , மக்களை விரட்டும் ஆட்கள் அங்கு இல்லை. எனவே நின்று நிதானமாக ஒரு ஐந்து நிமிடம்  தரிசித்தோம். பின்பு வரிசையில்  இருந்து அகன்று, அம்மன் சந்நிதி எதிரே இருக்கும், மண்டபத்தில் இருந்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் தரிசனம். பின்பு அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வெளியே வந்தோம். தங்க விக்ரகமாக காமாட்சி இருந்ததை சொல்லப்படும் பங்காரு காமாட்சி சந்நிதியும்  பார்த்து கிளம்பும் தருணத்தில், திவ்யா மீண்டும் யானை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் யானைகள் இருக்கும் கொட்டடிக்கு சென்றோம். அப்பொழுது யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். எங்களை கண்ட மகிழ்ச்சியில் ஒரு கணேசர் பாதம் தூக்கி ஆடத் துவங்கி விட்டார். உச்சி வெயில் கால்களை பதம் பார்க்கத் துவங்கியதால், அங்கிருந்து ஒரே ஓட்டமாக கோவிலுக்கு வெளியில் வந்தோம். அப்பொழுதே மணி நடுப்பகலை எட்ட அரைமணிநேரம் இருந்தது. காஞ்சியில் உச்சிவேலைக்கு பிறகு கோவில்கள் சாத்தப்படும். எனவே அங்கிருந்து கிளம்பி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தோம்.

எப்பொழுதும் அம்மன் கோவிலில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கூட்டம் குறைவாக இருக்கும். அன்றும் அப்படியே. இங்கும் நல்ல தரிசனம். பின்பு இந்தக் கோவிலின் புகழ்பெற்ற மாவடியை வலம் வந்து கிளம்பினோம். அப்பொழுது மணி பன்னிரண்டாகி விட்டது. எனவே அதற்கு மேல் எந்த கோவிலையும் பார்க்க இயலாது.

பின், காஞ்சி சங்கரமடம் சென்றுவிட்டுக் கிளம்பலாம் என்று அங்கு சென்றோம். நாங்கள் அங்கு செல்லவும், சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடியும் நேரமும் சரியாக இருந்தது. எனவே சிறிது நேரம் அங்கு காத்திருந்து பிரசாதம் பெற்றோம்.

கிளம்பும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்.

-தொடரும்
With Love LK