Posts Tagged ‘சிறுகதை’

இரவு

மார்ச் 15, 2014

மெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன்.  நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது.

இரவு 10 : 00

எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.

இரவு 10:20

கையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.

இரவு  11:00

பள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.

இரவு 11:30  

எக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
வெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.

மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன்.  அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.

மெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்….

அன்புடன் எல்கே

Advertisements

தத்து

திசெம்பர் 29, 2013

திருமணமாகிப் பன்னிரெண்டு வருடங்களில் எத்தனை ஏமாற்றங்கள், எத்தனைப் புறக்கணிப்புகள் அதன் காரணமாய் மனதில் எழுந்த வலிகள். உறவினர்களிடம் இருந்து வந்த குத்தல் பேச்சுகள் , சாடை மாடையாய் பேசிய கிண்டல்கள் இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து இன்று ரஞ்சனியின் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் அணையில் இருந்து விடுபட்ட ஆற்று வெள்ளமாய் அவை உடைபடும் அபாயமும் இருந்தது.

கண்களில் கண்ணீர் மெல்ல தவழ்ந்து சிறு நீரோடையைப் போல்  கன்னத்தில் இறங்க படுத்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கிப் பறந்தது.

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல உண்டு. அப்படிப்பட்ட ஒரு ஊரை சேர்ந்தவள்தான் ரஞ்சனி.கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொண்டாள் ரஞ்சனி.இருவருக்கும் பத்து வயது வித்தியாசம், இருந்தும் அவள் விரும்பியே அந்தத் திருமணத்தை செய்துக் கொண்டாள். திருமணம் முடிந்த முதல் வருடம் எப்பொழுதும் மணம் நிறைந்த பூக்கள் பூத்திருக்கும் பாதையில் நடப்பது போல். முதல் வருடம் செல்வதே தெரியாது. பின்தான் பிரச்சனைகள் ஆரம்பம். ரஞ்சனியின் வாழ்விலும் துவங்கியதுப் பிரச்சனைகள்.

வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்ந்தவளுக்கு தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்தனர் அங்கிருந்த மருத்துவர்கள். அன்றுத் துவங்கிய துன்பத் தசை வருடம் பல ஆகியும் இன்றும் அவளைப் பீடித்திருக்கிறது. நாட்கள் நகர நகர , கேள்விக் கணைகளின் எண்ணிக்கை அதிகமாகியது. கேள்விகள் எத்தனையை இருந்தாலும் ரஞ்சனியின் பதில் என்னவோ ஒரே மாதிரிதான். தேர்ந்த பந்துவீச்சாளரின் பந்தை தடுத்து ஆட இயலாத பேட்ஸ்மேனைப் போன்றதுதான் அவள் நிலை. இறைவன் ஆடிய விளையாடல்களில் அவள் வாழ்வும் ஒன்று.

ரஞ்சனியின் எண்ணக் குதிரையை கடிவாளம் போட்டு நிறுத்துவது போல் யாரோ ஒருவரின் குரல் அவளை இவ்வுலகிற்கு மீட்டு வந்தது. ரஞ்சனியை அழைத்தது அபர்ணா. ரஞ்சனி குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தாள். இறைவனின் விளையாடல்களின் வினோதத்தைப் பாருங்கள். அபர்ணாவிற்கும் குழந்தை இல்லை.

ரஞ்சனியை விட ஐந்து வருடங்கள் சிறியவள் அபர்ணா. அவளுக்கும் ஏதோக் காரணங்களால் குழந்தைப் பிறக்காமல் போக, ஒரேப் பிரச்சனையுடையவள் என்பதால் எளிதில் தோழிகளாகி விட்டனர். மதியம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்றும் அதற்குதான் வருகிறாள் என எண்ணி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டுக் கதவைத் திறந்தாள். வழக்கமாய் கொஞ்சம் டல்லடிக்கொண்டு வரும் அபர்ணா , பிரகாசமான முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

“உள்ள வாங்க “

“இல்ல வெளில கிளம்பிக்கிட்டு இருக்கோம். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம் . ரொம்ப நாளா அவர் சொல்லிட்டிருந்த மாதிரி இன்னிக்கு அந்த ஆஸ்ரமத்துக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம் ”

“என்ன திடீர்னு ?”

“இல்லை அவரும் அத்தையும் ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தேன். ஆனால் இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு தோணுச்சி அதான்…”

“நல்ல விஷயம் அபர்ணா. போயிட்டு வந்து விலாவரியா சொல்லுங்க “

அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு அபர்ணா சென்ற பின்னும் அங்கேயே நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து தன் அறையில் வந்துப் படுத்தவளின் மனதில் முந்தைய நாள் உரையாடல் மனதில் வந்துப் போனது .

எவ்வளவு நாள்தான் தன் மனதுக்குள்ளே வைத்துப் புழுங்குவது என தன் கணவன் ராகவனிடம் கேட்டு விட்டாள்.

ஏங்க எவ்ளோ நாள் நாம இப்படியே இருக்கறது. நாமளும் அந்த மருந்து இந்த மருந்து நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி எல்லாம் பண்ணிட்டோம். இருந்தும் எதுவும் சரியா வரலியே ..

“ம் ம் அதுக்கு ??”

“நான் சொல்ல வரத்து புரியலையா  இல்லை வழக்கம் போல புரியாத மாதிரி நடிக்கறீங்களா ?”

“இல்லமா . நீ என்ன சொல்ல வரேன்னு முழுசா சொல்லு “

“நாம ஒரு குழந்தைய தத்தெடுத்தா என்ன ?”

“ம்ம். தத்தெடுக்கலாம் . ஆனா….”

“உங்களுக்கு விருப்பம் இருக்கா ?”

“எனக்கு மட்டும் நமக்கு ஒருக் குழந்தை வேணும்னு ஆசை இருக்காதா ?”

“அப்புறம் ஏன் இழுக்கறீங்க  ?”

“இல்ல அம்மா ஒத்துப்பாங்களா ? அதான் தெரியலை . அதுமட்டுமில்ல மத்த சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. ஊர் பேர் தெரியாதக் குழந்தையை தத்தெடுத்துக் கிட்டா ஏதாவது பேசுவாங்க . அதுவும் யோசனையாத்தான் இருக்கு “

“அம்மா இதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கும் ஒரு பேரனோ பேத்தியோ வேணும்னு ஆசை இருக்காதா . அதுவுமில்லாமல் அவங்க அப்பவே படிச்சு வேலைக்குப் போனவங்க. அதனால் இப்படிலாம் யோசிக்க மாட்டாங்கா “

“உனக்கு இவ்ளோ நம்பிக்கை இருக்குன்னா நாம நாளைக்கு சாயங்காலம் இதைப் பத்தி அம்மாகிட்ட பேசலாம் . எனக்கு என்னமோ கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு “ எனப் பயந்தத் தன் கணவனின்  தோளில் சாய்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.

தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கணவனின் வருகைக்காகவும், தன் வாழ்க்கையில் வீசப் போகும் தென்றலுக்காகவும் காத்திருந்தாள்.

ராகவன் வீடு வந்து சேரும் வரை நிலைக் கொள்ளாமல் இருந்த அவள் , அவன் வந்தவுடன் எப்பொழுது அவன் பேச்சைத் துவங்குவான் என்றே எதிர்பார்த்திருந்தாள்.

ரஞ்சனி போட்டக் காப்பியைக் குடித்து விட்டு , ஹாலில் வந்து அமர்ந்தவன் தன் அம்மாவிடம் பேசத் துவங்கினான்.

“அம்மா , நானும் ரஞ்சனியும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் “

“என்னடா ?”  முகத்திலும் கேள்விக் கணையுடன், ஹாலில் நின்றுக் கொண்டிருந்த ரஞ்சனியைப் பார்த்தவாறு கேட்டாள்.

“எத்தனையோ டாக்டரைப் பார்த்தாச்சு. எவ்ளவோ மருந்தும் சாப்ட்டாச்சு ,ஆனா எதுக்கும் பலனில்லை. அதனால …”

“அதனால ?

“ஒருக் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு இருக்கோம் “

“இப்ப எதுக்கு தத்து எடுக்கணும் “

“என்னமா பேசற நீ . எங்களுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆச்சு.. இதுக்கு மேலையும் எப்படி  பொறுமையா இருக்கறது? எங்களுக்கும் ஆசையா இருக்காதா ? குழந்தை வேணும்னு.?”

“ஆசை இருந்து என்ன பண்ண ? விதி இல்லையேடா “

“விதி என்னாமா பண்ணும் ? நாமளா பண்றதுதான் எல்லாம் “

“இங்கப் பாரு. எனக்கு இதுல இஷ்டம் இல்லை. நீங்க வேணும்னா மாடர்னா மார் என்ன வேணா பண்ணிக்கலாம். ஆனால் நான் இன்னும் அந்தக் காலம்தான். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது “

இறுதியாய் உறுதியாய் சொன்னவள் ஹாலில் இருந்து தன் அறைக்கு சென்று விட்டவள்.

அவள் எழுந்து சென்றவுடன் என்ன செய்வது எனப் புரியாமல் பிரமைப் பிடித்தவனாய் ராகவன் உக்காந்திருக்க ,

“ஏங்க இப்ப என்ன பண்றது “

“இதுக்கு மேல அந்தப் பேச்சை எடுக்காத . நான் நேத்தே சொன்னேன் இது சரிப்படாது அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு , நீ கேட்டியா . இப்பப் பாரு அவங்க என் மேல கோச்சிக்கிட்டு போறாங்க . நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்”

அவனும் அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்றுவிட , கண்ணில் ததும்பிய கண்ணீருடன் மனம் கனத்தது அவளுக்கு. அந்த சோகத்திலும் இறைவனின் விந்தையை நினைத்து வியந்தாள். நேற்று வரை தத்தெடுக்க மாட்டேன் என்றவள் இன்று தத்தெடுக்க சென்றிருக்கிறாள். எப்படியோ ஒருக் குழந்தை இந்த வீட்டிற்கு வந்தாள் எனப் போதும் என நினைத்த எனக்கோ இப்படி…..

 -அன்புடன் எல்கே

உறுதி

ஓகஸ்ட் 31, 2011
அங்கு நிலவிய அமைதி, அவனை பயமுறுத்தியது. எப்பொழுதும் கலகலவென இருக்கும் அந்த இடம் நிசப்தத்தின் பிடியில் இருந்தது. தான் சொன்ன செய்தி, இத்தகையதொரு அமைதியை விளைவிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முற்றிலும் எதிர்விதமான சூழ்நிலையையே எதிர்பார்த்து, அதற்கு தன்னை தயார்படுத்தி இருந்தான். அதனால், இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான்.

மைதிலி, அவனுடைய அம்மா, கண்களில் எப்பொழுதும் கரை உடைந்து பாயக்கூடிய நிலையில் தளும்பும் கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் அப்பாவோ, எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பவரைப் போல் அமர்ந்திருந்தார். அவனின் தங்கை அம்ருதா, அங்கு நடந்துக் கொண்டிருந்த மவுனப் போராட்டத்தில் தான் பேசலாமா இல்லை பேசினால் தவறாகுமா என்றுப் புரியாமல் விழித்தாள்.

பல மணி நேரம் போல் கழிந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவன் தந்தை நரசிம்மன் நிதானமாகப் பேசத் துவங்கினார்.

“ஆல்ரைட், ரைட்டோ தப்போ நீயா முடிவு பண்ணிட்ட. அந்தப் பொண்ணை ஆத்துக்கு அழைச்சிண்டு வா. பேசிப் பாக்கலாம்.”

இடையில் பேசத் துவங்கிய தன் மனைவியை, “வேற என்ன பண்றது ? அந்தப் பொண்ணுக்குதான் வேற யாரும் இல்லைன்னு சொல்றான். அப்ப அந்தப் பொண்ணுகிட்டதான பேசியாகணும்” என்று சொல்லி அமைதியாக்கி விட்டு” அவசரப்பட்டு நாளைக்கே கூட்டிண்டு வராத, நல்ல நாளா பார்த்து சொல்றேன், அன்னிக்கு அழைச்சிண்டு வா” என்று கூறி நிறுத்தி, பின் “அழைச்சிண்டுதான் வரச் சொன்னேன்” என்று மீண்டும் ஒருமுறை அழுத்திக் கூறி, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் அங்கிருந்து எழுந்து சென்றார்.

அவர் அங்கிருந்து செல்வதற்காகக் காத்திருந்தவள் போல், புலம்ப ஆரம்பித்தாள் மைதிலி. “இந்தக் காலத்தில் பெத்தவா பேச்செல்லாம் யாரு கேக்கறா? நாலு எழுத்து படிச்சிட்டா எல்லாம் தனக்கேத் தெரியும்னு ஒரு மிதப்பு உங்களுகெல்லாம். உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்லைடா, அவளை அழைச்சிண்டு வரச் சொன்னாரே இந்த பிராமணன், அவரைச் சொல்லணும்.”

“என்ன அங்க சத்தம் ?” வெளியில் மைதிலியின் குரல் கேட்டு, உள்ளிருந்து ஒலித்தது நரசிம்மனின் குரல்.

“நான் ஏதோ புலம்பிண்டு இருக்கேன். அதுக்குக் கூட இந்தாத்தில் நேக்கு உரிமை இல்லையா?” மகனின் காதலியைத் தன் கணவன் வீட்டுக்கு அழைத்து வர சொல்லி விட்டாரே, அதைத் தடுக்க இயலவில்லையே என்ற ஆதங்கம் குரலில் வெளிப்பட்டது.

வெங்கட், மைதிலி, நரசிம்மனின் சீமந்தப் புத்திரன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அப்பா, வீட்டுக்கு அழைச்சிண்டு வரச் சொன்னதே பாதிக் கிணறைத் தாண்டியதைப் போல் உணர்ந்தான். எப்படியும் அம்மாவை, அப்பா சரிகட்டி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால் அம்மாவின் புலம்பலைக் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்குத் தன் அறையினுள் புகுந்தான்.

“வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, அவளை மொதல்ல ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுக்கணுமேன்னு இந்த வீட்ல யாருக்காவதுக் கவலை இருக்கா”, மைதிலியின் புலம்பல் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

“அம்மா! இப்ப எனக்கு கல்யாணம் பண்ணுங்கன்னு நான் கேட்டேனா? அதான், இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல படிப்பு முடிய? அப்புறம் ஏன், இப்பவே ஆரம்பிக்கற. அதெல்லாம் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரியம். அவங்க பார்த்துப்பாங்க.”  பட்டாசாய் வெடித்து விட்டு அங்கிருந்து, தன் அண்ணனின் அறைக்குள் புகுந்தாள், எம் பி ஏ படித்துக் கொண்டிருந்த அம்ருதா.

வெங்கட்டின் அறைக்குள் புகுந்தவள், ” டேய் யாருடா அது ? போட்டோவ காமிடா.”

“போட்டோலாம்  இல்லை”

“எனக்கு சின்ன வயசிலேயே காது குத்தியாச்சு. ஒழுங்கா மன்னியோட போட்டோவைக் காட்டு இல்லை…”

“விட மாட்டியே! பார்த்துக்கோ” என்று சொல்லித், தன் செல்போனில் இருந்த அவனோட காதலி ஸ்வர்ணாவின் போட்டோவைக் காண்பித்தான்.

“பேருக்கேத்த மாதிரியே தங்க விக்ரகம் மாதிரி இருக்காடா மன்னி. ஆமா, உன்னை போய் எப்படி லவ் பண்ணா மன்னி. பாவம்டா உன்கிட்ட மாட்டிக்கிட்டு…”

“பார்த்து பேசுடி. அம்மா காதில் நீ மன்னினு சொல்றது விழுந்தது, நீ காலி. அம்மாக்கு இதில இஷ்டம் இல்லை.”

“அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே, அதெல்லாம் அப்பா பார்த்துப்பா.”

“எனக்கென்னவோ கொஞ்சம் பயமா இருக்குடி, என்ன சொல்வாரோன்னு.”

“நீ ஏன்டா கவலைப்படற… அதெல்லாம், ஸ்வர்ணா பார்த்துப்பா. “

“என்னமோ ரொம்ப நாள் தெரிஞ்சமாதிரி சொல்ற?”
“உன்னையே லவ் பண்ணி சமாளிச்சிட்டு இருக்கா. இவாளையெல்லாம் சமாளிக்க மாட்டாளா என்ன?”

“உனக்கு எல்லாமே ஜோக்தான். நீ நினைக்கற மாதிரி அவ்ளோ சுலபம் இல்லை.”

“சரி சரி, ரொம்ப பீல் பண்ணாத, எல்லாம் நல்ல படியா நடக்கும்”

“நடந்தா நல்லது.”

அவள் சென்றுவிட, வெங்கட்டின் நினைவுகள் சில வாரங்களுக்கு முன் நடந்ததை அசை போட்டது.

இரண்டு வருடக் காதலை, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயத்தில் இருவரும் இருந்தனர்.

“ஒரு வேளை எங்க வீட்ல ஒத்துக்காட்டி வீட்டை விட்டு வெளியே வந்துக் கல்யாணம் பண்ணிக்கலாமா? உனக்கு அது ஓகேவா?”


“என்ன பேசற வெங்கட்? உன்னைப் பெத்து வளர்த்தவங்க அவங்க. கண்டிப்பா எதிர்ப்புச் சொன்னாலும் நாமதான் போராடி சம்மதிக்க வைக்கணும்.”

“ஒரு வேளை, போராடியும் சம்மதம் கிடைக்காட்டி..”

“அதெப்படி கிடைக்காம போகும்? நம்பிக்கைதான் வாழ்க்கை. அவங்கச் சம்மதம் இல்லாமல் நம்ம கல்யாணம் இல்லை.”

“அப்ப உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லை”

“கண்டிப்பா இல்லை.”

ஒரு பக்கம் ஸ்வர்ணாவின் பிடிவாதம், மற்றொரு பக்கம் அம்மாவின் பிடிவாதம். இரண்டுப் பெண்களின் பிடிவாதத்துக்கு இடையில் தன் வாழ்வு ஊசலாடுவதாய் வெங்கட் நினைத்தான்.

நடுவில் இருந்த இரண்டு நாட்களும் விரைந்தோட, சனிக்கிழமை மாலை.

“நாலு மணிக்கு முன்னாடி வீட்ல இருக்கணும். நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா? லேட்டா வந்தா அப்பாவுக்குப் பிடிக்காது. அதுவுமில்லாமல் முதல் முறை வீட்டுக்கு வர…” வெங்கட் பேசிக்கொண்டேப் போக, ஸ்வர்ணா இடைமறித்தாள்.

“நீ வர வேண்டாம். உன் வீட்டு அட்ரெஸ் இருக்கு. ஷார்ப்பா நாலு மணிக்கு வீட்ல இருப்பேன் போதுமா? “

“சரியா வந்திருவதானே?”

“அதெல்லாம் சரியா வந்திருவேன். தொலைஞ்சு போறதுக்கு நான் என்ன சின்னக் குழந்தையா?”

“ஹ்ம்ம் சரி சரி.”

வழக்கமாய் விரைந்து முடியும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஏனோ மிக மெதுவாய் சென்றுக் கொண்டிருந்ததைப் போல் வெங்கட்டிற்கு எண்ணம். மாலை என்ன நடக்குமோ என்ற பயம் மனதை பிரட்ட, நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

தொடர்ந்துப் படிக்க அதீதம்  


முடிவு

பிப்ரவரி 10, 2011

அன்றுக் காலையில் இருந்தே அவளது மனம் குழம்பிக் கொண்டிருந்தது. தான் செய்வது சரியா , தான் எடுத்த முடிவு சரியா என்றுப் புரியாமல் சில காலமாய் குழம்பிக் கொண்டிருந்தாலும், அன்று அவளின் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. அதைப் பற்றி யாரிடம் பேசுவது என்றும் புரியவில்லை அவளுக்கு. தான் எடுத்த முடிவு தன் அக்கம்பக்கத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தாலும் அதன் விளைவுகள் எத்தனை தூரம் இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

முதலில் எதோ ஒரு துணிச்சலுடன் ஒத்துக் கொண்டவள் , பின் அது சம்பந்தமான விஷயங்களைப் படித்தப் பின் குழப்பம் அடையத் துவங்கினாள். தான் செய்யவிருக்கும் செயலின் விளைவுகள் எத்தகையதாய் இருக்கும் ? யோசிக்க யோசிக்க அவளுக்கு குழப்பமே மிஞ்சியது .

குழப்பத்தில் என்ன சமைத்தோம்,என்ன சாபிட்டோம் என்றுக் கூடத் தெரியாமல் அமர்ந்து இருந்தவளை வாசலில் கதவு திறக்கும் ஓசை உலகுக்குத் திருப்பியது . அவளின் அடுத்த வீட்டுத் தோழி கமலா வீட்டிற்குள் அழுது வீங்கியக் கண்களுடன் நுழைந்தாள்.

“என்னக்கா ஆச்சு? “

“புதுசா என்ன ஆகப் போது? பொழுது விடிஞ்சு பொழுது போனா , வழக்கம்போல ஆரம்பிச்சுடுவாங்க எங்க வீட்ல . அதே பிரச்சனைதான் .”

“என்ன குழந்தை இல்லைன்னு மறுபடியும் பிரச்சனையா ? “

“அதேதான் கலா. நான் என்னடி பண்ண? குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க . தத்து எடுக்க நாங்க ரெடியா இருந்தாலும் என் மாமியாரும், மாமனாரும் தயாராய் இல்லை . வேறு ஏதாவது வழி இருக்கானும் எனக்குத் தெரியலை . தினம் தினம் நரகமாய் போகுது . ஏன்டா பிறந்தோம்னு தோணுது எனக்கு .”

கலா அங்கு குடிவந்தப் புதிதில் இருந்து அவளுக்கு பேச்சுத் துணைக்கும், உதவி செய்வதற்கும் தோழியாய் இருப்பது கமலாதான். கமலாவிற்கும் கலாவை விட்டால் வெறும் யாரும் இல்லை தன் வேதனைகளை சொல்ல. கலாவிடம் மனவிட்டு சிறிது நேரம் பேசினால் கமலாவிற்கு மனம் லேசாகும். எனவே வீட்டில் பிரச்சனைகள் வரும் பொழுது அவள் வீட்டிற்கு வந்து புலம்புவது வழக்கம்.

இன்றும் அதே போன்றுதான். கமலாவிற்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும், குழந்தை பெறுவது அவள் உடலுக்கு நல்லது அல்ல என்றும் டாக்டர் கூறி விட, பழமையில் ஊறிய அவளது மாமியாரும் மாமனாரும் தத்து எடுக்கவோ மற்ற முறைகளை உபயோகிக்கவோ விரும்பவில்லை.

அவளுக்கு ஆறுதலாய் வார்த்தைகள் கூறி அனுப்பியப் பின் கலாவின் மனது தெளிவடைந்து இருந்தது. குழந்தை இல்லாத தம்பதியருக்கு தன்னால் ஆன உதவியாய் அவர்கள் கருவை சுமக்க இருக்கும் வாடகைத் தாயாய் செல்வதை நினைத்து மகிழ்ச்சியே இருந்தது அவளிடம். தன்னால் கமலாவிற்கு உதவ இயலவில்லையே என்ற சிறு வருத்தம் மட்டும் உறுத்தியது .

சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் விலகி விட்டது அவளுக்கு . குழந்தை இல்லா ஒரு பெண்ணுக்கு தான் செய்யும் உதவிக்கு யார் என்ன சொன்னாலும் கவலைப் படத் தேவை இல்லை என்று முடிவு செய்தாள்.

இந்தக் கதை வல்லமை தளத்தில் வந்துள்ளது.

அன்புடன் எல்கே

காலம் கடந்த ஞானம்

பிப்ரவரி 7, 2011
வழக்கம்போல் அன்றும் நடந்த சண்டை சுரேஷிற்கு எரிச்சலையே தந்தது. அவன் வயது சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதையே சொர்க்கமாக என்ன அவனோ வீட்டிற்கு வெளியில் இருப்பதையே வரமாக எண்ணினான்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் வீடும் சொர்க்கமாகதான் இருந்தது. எதோ ஒரு சிறுப் பிரச்சனையில் துவங்கிய அவனது பெற்றோரின் சண்டை நீடித்துக் கொண்டே செல்ல பலியாகியது சுரேஷ்தான். அவனளவில் எதோ சண்டை என்று மட்டுமே புரிந்தது. அவனின் பதிமூன்று வயதிற்கு அதற்கு மேல் எட்டவில்லை.

வீட்டிற்கு வந்தால்  இருவரும் இவனிடம் பேசாமல் இருப்பதும் , வெளியில் எங்கும் அவனை அவன் தந்தை அழைத்து செல்லாமல் இருப்பதும் அவனுக்கு சோகத்தை உண்டுபண்ணியது.

அன்று அப்படிதான் , அவன் அம்மாவிடம்அம்மா ! வெளில போலாமா ? நாம எல்லாரும் சேர்ந்து வெளில போய் எவ்ளோ நாளாச்சு ?” கேட்டவனுக்கு கோபம் தெறிக்க பதில் வந்தது ராணியிடம் இருந்து, ,”அது ஒண்ணுதான் குறைச்சல் . போடா போய் படிக்கற வழியப்  பாரு. படிச்சு முடிச்சா கம்ப்யூட்டர்ல கேம் விளையாடு. நேரம் காலம் தெரியாம வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு” .

முகத்தை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியில் வந்த சுரேஷ் , தினேஷிடம் மீண்டும்  அதேக் கேள்வியை கேட்க அட்சரம் மாறாமல் ராணி சொன்ன அதே பதில் வந்தது.

வாடிய முகத்துடன் வந்தவன் டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனல்களை மாற்றிக் கொண்டு வந்தான். எதுவும் பிடிக்காமல் எதோ ஒரு அழுகை மெகாத் தொடரை பார்க்கத் துவங்கினான். அதில் வந்தக் காட்சி அவன் மனதில் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது, அன்று ஒரு முடிவுடன் படுக்க சென்றான்.

மறுநாள் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை . ராணி கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டு தூங்குபவன் போல் நடித்தான்இருவரும் அலுவலகம் செல்லும் வரைக் காத்திருந்தவன் , பின் எழுந்தான். தன் பள்ளி பையில் இருந்து நோட்டை எடுத்தவன் எதையோ எழுதினான். அவன் மனதில் முதல்நாள் பார்த்த சீரியல் நினைவிற்கு வர எழுதிய நோட்டை ஹாலில் வைத்துவிட்டு அபார்ட்மென்ட்டின் மாடியை நோக்கி செல்லத் துவங்கினான்.

ஒரு வாரம் கழித்துபுகைப்படமாய் காட்சி அளித்துக் கொண்டிருந்த சுரேஷின் முன் தினேஷும் ராணியும் இனி சண்டைப் போட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

டிஸ்கி 1 :  இது வல்லமையில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி 2 : உரிமையில்லை..கவிதை  வார்ப்பு இணையத் தளத்தில் வெளியாகி உள்ளது
அன்புடன் எல்கே

கண்கெட்டப் பின்

நவம்பர் 12, 2010

நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஒரு டவுன். அங்கு பிரதான சாலையில் அவனது தேனீர் கடையும் ,அதனுடன் இணைந்த சிறு பெட்டிக் கடையும் அமைந்திருந்தது. அது சிறு நகரம் அதனால் கடைக்கு வருவோரை நன்கு பரிச்சியம் உண்டு. காலையில் சுறுசுறுப்புடன் காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்த அவன் ,கடைக்கு வந்த ராஜுவை பார்த்து புன்னகைதான். வழக்கம் போல், ஒரு கோல்ட் பில்டரை எடுத்து நீட்ட , ராஜு அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு “டீ மட்டும் போதும் “என்றான் .

டீ குடித்துக் கொண்டிருந்த ராஜுவையே பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய மனதில் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின . ராஜு, கல்லூரி காலத்தில் இருந்தே அந்தக் கடைக்கு தினசரி வருபவன். முதலில் வேலைக்கு ஒன்றாக துவங்கிய புகை பின் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்றளவிற்கு போனது. புகையை தவிர

வேறு கெட்டப் பழக்கம் இல்லாத இளைஞன் ராஜு.

கல்லூரி முடித்து நல்ல வேலை பின் திருமணமும் முடிந்தது. திருமணம் முடிந்த பின்னும் மாறவில்லை ராஜுவின் பழக்கம். குழந்தைப் பிறந்த பின்னும் பழைய ராஜுவாக புகை மன்னனாக வலம் வந்தான்.

பழைய நினைவில் மூழ்கி இருந்தவனை உலகுக்கு கொண்டு வந்தது ராஜுவின் குரல் .

“அண்ணே, இந்தாங்க டீக்கு காசு “

“சரி ராஜு”.

கடையில் இருந்து சென்றவனை பார்த்தவண்ணம் மீண்டும் பழைய நினைவில் மூழ்கினான் . அந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும் . ஒரு ஞாயிறு . மாலை நேரத்தில் விடுமுறைக்கான சோம்பலில் மூழ்கிக் கிடந்தது வீதி. தன் நான்கு வயது மகளுடன் வந்த ராஜு, மகளை வீதியின் மறு பகுதியில் நிறுத்தி விட்டு வீதியை கடந்து கடைக்கு வந்தான் .

“ஏம்பா , குழந்தையை அந்தப் பக்கம் விட்டுட்டு வர . ஒண்ணா, இங்க கூட்டிகிட்டு வந்திருக்கணும். இல்லாட்டி வீட்டிலேயே விட்டு வந்திருக்கணும் “

“ஒன்னும் ஆகாது அண்ணே. நீங்க சிகரட்டை கொடுங்க “.

வாங்கி பற்றவைத்து திரும்பியவன், தன் மகள் ரோட்டை கடக்க முயல்வதைப் பார்த்து ,பதற்றத்துடன் அந்தப் பக்கம் போக முயல, அதற்குள் நெரிசல் இல்லா சாலையில் வேகத்துடன் வந்த கார் அந்த சிறுமியை மோதி வீசியது.

அதிர்ச்சியில் ராஜு சிலையாய் உறைந்தான்.

நிகழ்காலத்திற்கு திரும்பியவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் “சிலருக்கு பட்டால்தான் உறைக்கிறது”.

அன்புடன் எல்கே